2017-05-25 16:21:00

70வது Cannes திரைப்பட விழாவில், பேரருள்திரு Viganò


மே,25,2017. திரைப்படம், சமூகத்தின் எதார்த்தத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்துவதில் முக்கிய அங்கம் வகித்தாலும், அது ஒளியின் எல்லைகளைத் திறந்துவிடும் மற்றொரு நோக்கத்தையும் கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறக்கக் கூடாது என, திருப்பீட ஊடகத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

“விழாவின் புனித அழகு” என்ற தலைப்பில் இவ்வியாழனன்று நடைபெற்ற, எழுபதாவது Cannes திரைப்பட விழாவில், திரைப்படம், நம்பிக்கையை அறிவிக்கின்றது என்ற தலைப்பில் உரையாற்றிய, திருப்பீட சமூகத் தொடர்பு செயலகத்தின் தலைவர், பேரருள்திரு Dario Edoardo Viganò அவர்கள் இவ்வாறு கூறினார்.

திரைப்படம், மனிதக் கண்களால் காணமுடியாத இறைவனின் இரக்கத்தை, மனித வரலாற்றில் வெளிக்கொணர முயற்சிக்கின்றது என்றும் உரைத்த பேரருள்திரு Viganò அவர்கள், 2016ம் ஆண்டில் விருதுபெற்ற, Ken Loach அவர்களின் Daniel Blake என்ற திரைப்படம் பற்றிக் குறிப்பிட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மே 28, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 51வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ஊடகவியலாளர், இக்காலத்திலும், வருங்காலத்திலும் நம்பிக்கையை இழந்துவிடாமல், உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினார், பேரருள்திரு Viganò.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.