2017-05-24 16:49:00

கொரியாவும், திருப்பீடமும் தூதரக உறவுகளில் 70 ஆண்டுகள்


மே,24,2017. கொரியாவும், திருப்பீடமும் தூதரக உறவுகளை நிறுவிய 70ம் ஆண்டைக் கொண்டாட, கொரியாவின் சார்பில், ஆயர்கள் குழுவொன்று திருத்தந்தையைச் சந்திப்பதற்கு, தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன் (Moon Jae-in) அவர்கள் விண்ணப்பித்துள்ளார் என்று பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

தென் கொரிய ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Igino Kim Hee-Jung அவர்கள் தலைமையில், ஆயர்களின் குழு ஒன்று, அரசு அதிகாரிகளுடன் வத்திக்கானுக்கு வருகை தரும் என்று பீதேஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது.

1947ம் ஆண்டு, ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்து கொரியா விடுதலை பெற்றதும், திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்கள், அந்நாட்டிற்கு, திருப்பீடத்தின் தூதராக, அருள்பணி Patrick James Byrne அவர்களை அனுப்பியதன் வழியே, கொரியாவை ஒரு தனி நாடாக, திருப்பீடம் ஏற்றுக்கொண்டதை உலகறியச் செய்தார் என்று பீதேஸ் செய்தி மேலும் கூறுகிறது.

1948ம் ஆண்டு திருப்பீடம் மேற்கொண்ட முயற்சிகளால், பல கத்தோலிக்க நாடுகள், கொரியாவை தனி நாடாக ஏற்றுக்கொள்ள முன்வந்தன.

Maryknoll சபையைச் சேர்ந்த அருள்பணி James Byrne அவர்கள், 1949ம் ஆண்டு ஆயராக உயர்த்தப்பட்டபின், 1950ம் ஆண்டு துவங்கிய கொரிய போரினால், அவர் சிறைப்படுத்தப்பட்டு, அங்கு உயிர் துறந்தார் என்பதும், அவரை, அருளாளராக அறிவிக்கும் முயற்சிகளை தென் கொரிய தலத்திருஅவை துவக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.