2017-05-23 16:20:00

புலம்பெயர்தல் கட்டாயமாக இடம்பெற வேண்டிய அவசியமில்லை


மே,23,2017. மக்கள் புலம்பெயர்தல், கட்டாயமாக இடம்பெற வேண்டிய நிலையாக இல்லாமல், ஒரு தெரிவுநிலையாக அமைய வேண்டும் என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் உரையாற்றினார்.

நீடித்த நிலையான வளர்ச்சி மற்றும், ஏழ்மை ஒழிப்பு குறித்த ஐ.நா. அமர்வில், புலம்பெயரும் மக்கள் பற்றிய விவாதத்தில் பகிர்ந்துகொண்ட, ஐ.நா.வுக்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

மக்கள் புலம்பெயர்தலுக்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்று சொல்வதற்குமுன், அவர்கள், தங்கள் சொந்த நாடுகளிலேயே தங்கி, அமைதியிலும், பொருளாதாரப் பாதுகாப்பிலும் வாழ்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்பதை நாம் நினைவுகூர வேண்டும் எனவும் உரையாற்றினார், பேராயர் அவுசா.

உலகளாவிய ஒப்பந்தங்கள் வழியாக, புலம்பெயர்தல் குறித்த ஒரு பாதுகாப்பான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டால், புலம்பெயர்தல் குறித்த பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும், பேராயர் அவுசா அவர்கள் ஐ.நா.வில் கூறினார்.

மேலும், புலம்பெயர்தல் பிரச்சனை, மனிதர்களால் உருவாக்கப்பட்ட விவகாரம் என்ற தலைப்பிலும், இத்திங்களன்று, மற்றோர் அமர்வில், ஐ.நா.வில் உரையாற்றினார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.