2017-05-20 15:46:00

கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நசரேன்


மே,20,2016. தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி நசரேன் சூசை அவர்களை, மே 20, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கோட்டாறு மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்  அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்டு, கன்னியாகுமரி தூய அலங்கார உபகார அன்னை திருத்தலத்தில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிவந்த அருள்பணி நசரேன் சூசை அவர்களை நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கோட்டாறு மறைமாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் என்ற ஊரில் 1963ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பிறந்த புதிய ஆயர் நசரேன் அவர்கள், சென்னை, பூந்தமல்லி திருஇதயக் குருத்துவக் கல்லூரியில் மெய்யியல் மற்றும், இறையியல் கல்வி பயின்றவர்.

பெல்ஜியத்தின் லுவெய்ன் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முதுகலைப் பட்டமும், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், இறையியலில் முனைவர் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றிருப்பவர், புதிய ஆயர் நசரேன்.

1989ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதியன்று கோட்டாறு மறைமாவட்டத்திற்கு அருள்பணியாளராகத் திருப்பொழிவு பெற்ற இவர், பூந்தமல்லி திருஇதயக் குருத்துவக் கல்லூரி, திருச்சி புனித பவுல் குருத்துவ கல்லூரி, சென்னை அருள்கடல் உட்பட, இந்தியாவின் பல நிறுவனங்களில் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார், கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நசரேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.