2017-05-19 15:48:00

முகநூலில் பேதுரு காசு, திருப்பீட செயலகம்


மே,19,2017. உலகளாவிய திருஅவையின் பல்வேறு தேவைகளுக்கும், மிகவும் தேவையில் இருப்போருக்கும் உதவுவதற்கென திருத்தந்தையருக்கு வழங்கப்படும் பேதுரு காசு என்ற உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையின் நன்கொடை நடவடிக்கை குறித்து, முகநூலிலும் வெளியிடப்படும் என, திருப்பீட செயலகம் அறிவித்துள்ளது.

பேதுரு காசு நடவடிக்கை குறித்த தகவல்கள், டுவிட்டர், இன்ஸ்டகிராம் ஆகிய சமூகவலைத்தளங்களில் ஏற்கனவே வெளியிடப்பட்டுவரும்வேளை, தற்போது முகநூலில், இத்தாலிய மொழியில், முதலில் வெளியிடப்படுகிறது என, திருப்பீட செயலகம் மேலும் அறிவித்துள்ளது.

வரும் செப்டம்பர் மற்றும், அக்டோபரில், இஸ்பானியம் மற்றும் ஆங்கில மொழிகளில் அது செயல்படத் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேதுரு காசு என்ற மிகவும் பழமையான உண்டியல் நடவடிக்கையால் நடத்தப்படும் பிறரன்புப் பணிகள் குறித்த விவரங்களை எல்லாரும் அறியச் செய்யவும், இதில் மக்கள் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும், மக்களிடையே உரையாடலை ஊக்குவிக்கவும் உதவும் நோக்கத்தில், முகநூல் செயலி ஆரம்பிக்கப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பீடத்தின் விருப்பத்தின்பேரில், திருப்பீட செயலகம், திருப்பீட ஊடகச் செயலகம், வத்திக்கான் நாட்டு அரசு ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இப்புதியச் செயலியை ஆரம்பித்துள்ளன.

திருப்பீடத்தின் பல்வேறு பணிகளுக்கு, திருஅவையின் உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவதை ஊக்குவித்து, திருத்தந்தை 9ம் பத்திநாதர் அவர்கள், 1871ம் ஆண்டில், பேதுரு காசு என்ற நடவடிக்கையை ஆரம்பித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.