2017-05-19 16:03:00

இயேசுவின் திருவுடல், திருஇரத்தத்தின் பெருவிழா நாள் மாற்றம்


மே,19,2017. “நாம் வாழ்வது, வேலைசெய்வது, கடுமையாக முயற்சி செய்வது, துன்புறுவது ஆகியவற்றின் இலக்கையும், மகிமையையும் நினைவுகூர்ந்தவர்களாய், நம் வாழ்வை எப்போதும் உயர்நிலைக்கு வைத்திருக்கும் வழிகளைத் தேடுவோமாக” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், இவ்வாண்டு இயேசுவின் திருவுடல், திருஇரத்தத்தின் பெருவிழா நாளை, வேறொரு நாளில் சிறப்பிப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீர்மானித்துள்ளார்.

வத்திக்கானில், ஒவ்வோர் ஆண்டும் வியாழக்கிழமையன்று பாரம்பரியமாகச் சிறப்பிக்கப்படும் இப்பெருவிழாவில், உரோம் நகரிலுள்ள இறைமக்கள் எல்லாரும், இன்னும் சிறந்தமுறையில் பங்குகொள்வதற்கு உதவியாக, இந்த மாற்றத்தைத் திருத்தந்தை கொணர்ந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற ஜூன் 15, வியாழக்கிழமையன்று சிறப்பிக்கப்படவிருந்த இயேசுவின் திருவுடல், திருஇரத்தத்தின் பெருவிழா, ஜூன் 18, ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இப்பெருவிழா நாள் மாலையில், திருத்தந்தையர், உரோம் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், அங்கிருந்து திருநற்கருணை பவனி  ஆரம்பிக்கும். இப்பவனி, உரோம் மேரி மேஜர் பசிலிக்காவில் நிறைவடையும். இப்பவனியின் இறுதியில், திருத்தந்தையர் திருநற்கருணை ஆசீர் வழங்குவர்.

பொதுவாக, இயேசுவின் திருவுடல், திருஇரத்தத்தின் பெருவிழா, உலகின் பெரும்பாலான நாடுகளில், வத்திக்கானில் சிறப்பிக்கப்படும் வியாழக்கிழமையைத் தொடர்ந்து வரும் ஞாயிறன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

திருத்தந்தையின் ஜூன் மாத திருவழிபாடு நிகழ்வுகளை இவ்வியாழனன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்த திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கிரெக் புர்கே அவர்கள், இத்தகவலையும் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.