2017-05-18 14:12:00

மக்களைக் காப்பதற்கு இறைவனின் பெயரை பயன்படுத்தவேண்டும்


மே,18,2017. பன்னாட்டு உறவுகள், கார் மேகங்களால் சூழப்பட்டுள்ளதைப்போன்ற ஓர் உணர்வு நிலவும் இன்றையச் சூழலில், நாடுகளுக்கிடையே தூதர்களாகப் பணியாற்றுவது சவால்கள் நிறைந்த ஒரு பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டுத் தூதர்களிடம் கூறினார்.

கசக்ஸ்தான், மவுரித்தானியா, நேபாளம், நைஜர், சூடான், டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளின் சார்பில், பணியாற்ற வந்திருக்கும் தூதர்களின் தகுதிச் சான்றிதழ்களை, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் பெற்றுக்கொண்ட திருத்தந்தை, அவர்களுக்கும், அவர்கள் நாட்டின் தலைவர்கள் மற்றும் மக்களுக்கும், தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மவுரித்தானியா இஸ்லாமியக் குடியரசு, வத்திக்கானுடன் முதல் முறையாக தூதரக உறவுகள் மேற்கொள்கிறது என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, அந்நாட்டின் முதல் தூதராகப் பணியாற்ற வந்திருக்கும், Aichetou Mint M’Haiham என்ற பெண்மணியை, குறிப்பிட்டு வரவேற்றார்.

ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் பொருளாதார கட்டமைப்பு, மக்களுக்குப் பணியாற்றுவதற்குப் பதில், பணத்திற்குப் பணியாற்றுவதால், நாடுகளிடையே இறுக்கமானச் சூழல் நிலவுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நாட்டின் வளங்களை ஒருசிலரின் சுயநலப் பிடியிலிருந்து விடுவித்து, மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசுகள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நாட்டிற்குள்ளும், நாடுகளுக்கிடையிலும் பிரச்சனைகள் எழும்போது, அரசுகள், எளிதாகவும், முதல் முதலாகவும் சிந்திப்பது, இராணுவ அடக்குமுறைகளே என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில், கவலையுடன் குறிப்பிட்டார்.

மக்களைக் காப்பதற்கு இறைவனின் பெயரை பயன்படுத்தவேண்டும் என்ற உண்மை நிலை மாறி, மக்களை அழிப்பதற்கு இறைவனின் பெயரைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு கொடுமை என்பதையும், திருத்தந்தை, தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.