2017-05-17 14:51:00

புதன் மறைக்கல்வியுரை: நம்பிக்கையின் திருத்தூதர் மகதலா மரியா


மே,17,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இப்புதன் காலை பத்து மணியளவில், தன் புதன் மறைக்கல்வியுரையைத் தொடங்கினார். வழக்கம்போல, முதலில், சிறிய திறந்த வாகனத்தில், வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகள் மத்தியில் வலம் வந்து, குழந்தைகளை முத்தமிட்டு, அனைவரையும் உற்சாகப்படுத்தி மேடைக்குச் சென்றார் திருத்தந்தை. அண்மைக் காலமாக, கிறிஸ்தவ நம்பிக்கை என்ற தலைப்பில் தொடர்ந்து வழங்கப்பட்டுவரும் புதன் பொது மறைக்கல்வியுரைகளில், இப்புதன் மறைக்கல்வியுரைக்கு அறிமுகமாக, மகதலா மரியா உயிர்த்த இயேசுவைக் கண்ட நிகழ்வு, யோவான் நற்செய்தியிலிருந்து, முதலில் பல மொழிகளில் வாசிக்கப்பட்டது.

“இயேசு மகதலா மரியாவிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார். இயேசு அவரிடம், “மரியா”என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’என்பது பொருள். இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும் உங்கள் தந்தையும், என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்’எனச் சொல்”என்றார். மகதலா மரியா, சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்”என்று சொன்னார் (யோவா.20,15-18a)”.

இந்நற்செய்தி பகுதி வாசிக்கப்பட்டபின், அன்புச் சகோதர சகோதரிகளே!,  காலை வணக்கம், இந்த வாரங்களில், நம் சிந்தனைகள், பாஸ்கா மறையுண்மை பற்றி அமைந்திருக்கின்றன. உயிர்த்த இயேசுவை முதலில் பார்த்தவர் என, நற்செய்திகளில் சொல்லப்பட்டுள்ள மகதலா மரியாவை இன்று சந்திப்போம் என, இப்புதன் பொது மறைக்கல்வியுரையை, முதலில் இத்தாலிய மொழியில் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மகதலா மரியா, நம்பிக்கையின் திருத்தூதர் என, நற்செய்தியால் சுட்டிக்காட்டப்படுகிறார். இயேசு, உயிர்த்த நாளின் காலையில், மரியா, இயேசுவின் கல்லறைக்குச் சென்றார், காலியான கல்லறையை அவர் கண்டார், பின், இந்தச் செய்தியை, பேதுருவிடமும், மற்ற சீடர்களிடமும் சொல்வதற்காக அங்கிருந்து திரும்பினார் என, புனித யோவான் நமக்குச் சொல்கிறார். என்ன நடந்தது என்பதை இன்னும் புரியாதநிலையில், மரியா கல்லறைக்குச் சென்றார், அங்கே உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தார், அவர், மரியாவை, பெயர் சொல்லி அழைக்கும்வரை, அவரை யார் என மரியா அறியாமல் இருந்தார். இறந்தோரிடமிருந்து இயேசு உயிர்பெற்றெழுந்தபின், இது அவர் அளித்த முதல் காட்சியாகும். இக்காட்சி, மிகவும் ஓர் ஆழமான தனிப்பட்ட நிகழ்வாக உள்ளது. இயேசு, மகதலா மரியாவிடம் நடந்துகொண்டதுபோன்று, நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். தம் பிரசன்னத்தால் நம்மை மகிழ்வால் நிரப்புகிறார். இயேசுவை நாம் சந்திக்கும்போது, அது நமக்குச் சுதந்திரத்தைக் கொணர்ந்து, வாழ்வை புதிய கோணத்தில் பார்ப்பதற்கு, நம் பார்வையைத் திறந்து வைக்கின்றது. அது, இந்த உலகை மாற்றுகின்றது மற்றும், இறவா நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றது. உயிர்த்த ஆண்டவர், மரியாவிடம், என்னை பற்றிக் கொள்ளாதே, மாறாக, போய், தம் உயிர்ப்பின் நற்செய்தியை மற்றவருக்கு அறிவி என்று சொன்னார். இவ்வாறு, மகதலா மரியா, கிறிஸ்தவ நம்பிக்கையின் திருத்தூதராக மாறுகிறார். நாமும், இவரின் செபங்களின் வழியாக உயிர்த்த ஆண்டவரைப் புதிதாகச் சந்திப்போமாக. உயிர்த்த ஆண்டவர், நம்மைப் பெயர் சொல்லி அழைக்கின்றார், நம் துன்பங்களை மகிழ்வாக மாற்றுகின்றார் மற்றும், அவர் உண்மையிலேயே உயிர்பெற்றெழுந்தார் என்பதை, நம் வாழ்வால் அறிவிப்பதற்கு நம்மை அனுப்புகிறார்.

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், இந்தியா, இந்தோனேசியா, ஹாங்காங் உட்பட, இதில் கலந்துகொண்ட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்தினார் திருத்தந்தை. திருநற்கருணை கழகங்களின் திருத்தூதரான புனித பாஸ்கால் பைலோன் அவர்களின் திருநாள் இன்று. இளையோரே, இயேசுவின் உண்மையான பிரசன்னத்தில் நம்பிக்கை வைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை, இப்புனிதர் எடுத்துச் சொல்கிறார். நோயுற்றோரே, திருநற்கருணை உங்களைத் தாங்கிப் பிடிப்பதாக. இவ்வாறு கூறியபின், அனைத்துப் பயணிகள் மற்றும், அவர்களின் குடும்பங்களின் மீது, நம் தந்தையாம் இறைவனின் அன்பிரக்கம் பொழியப்பட செபித்து, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.