2017-05-17 15:20:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் காலம் பாகம் 17


மே,17,2017. அக்காலத்தில், எருசலேமில், புதிய நெறியான கிறிஸ்தவம் வேகமாகப் பரவிவந்ததை, சவுலால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் சவுல் யூத மதத்தில் தீவிரப் பற்றுடையவராக இருந்தார். வேகமாக வளர்ந்து வந்த கிறிஸ்தவத்திற்கு வேகத் தடையாகச் செயல்பட ஆரம்பித்தார் சவுல். தனது மதத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள், வேறோரு நெறியைப் பின்பற்றுவது கண்டு, வீடுகளில் புகுந்து அவர்களை அடக்கி ஒடுக்கும் பணியில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தினார். தமஸ்கு நகரம் எருசலேமிலிருந்து 218 கிலோ மீட்டர் தூரத்திலிருந்தது. இந்நகரத்திலும் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டிருப்பதை அறிந்த சவுல், அந்நகர் சென்று, புதிய நெறியைப் பின்செல்பவர்களைக் கைது செய்து பிடித்து வருவதற்கு, ஆட்களுடன் குதிரையில் புறப்பட்டார் சவுல். தமஸ்கு செல்லும் சாலையில்தான் ஆண்டவராம் இயேசு, அவரைத் தடுத்தாட்கொண்டார். திடீரென்று வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி சவுலின் பார்வையைப் பறித்தது. ‘சவுலே… சவுலே… ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்ற  குரலை மட்டும் கேட்டார் சவுல். நல்ல மனசாட்சியைக் கொண்டிருந்த சவுல், உடனடியாக, ஆண்டவரே நீர் யார்? என்றே திரும்பிக் கேட்டார். அதற்கு அந்தக் குரல், ‘நீ துன்புறுத்தும் இயேசுவே நான்’ என்று பதில் சொன்னது. அதன்பின் இயேசு ஆண்டவர் அந்தக் காட்சியில் கூறியபடி, சவுல், தன்னுடன் வந்த ஆட்களின் உதவியுடன் தமஸ்கு சென்றார். கண்கள் திறந்திருந்தும் பார்க்க இயலாமல் இருந்தார். தமஸ்கு நகரில், சவுல் மூன்று நாள்கள் பார்வையில்லாமல் இருந்தார். அந்த மூன்று நாள்களும், அவர் உண்ணவும் இல்லை குடிக்கவும் இல்லை. அதேநேரம், இயேசு, அனனியா என்ற தம் சீடரை, சவுல் தங்கியிருந்த வீட்டிற்கு அனுப்பினார். அனனியா, சவுலுக்கு திருமுழுக்கு அளித்தார். அதன்பின் பவுல் என்ற பெயரையே பயன்படுத்தினார் சவுல். 

பவுலின் தமஸ்கு அனுபவத்திற்குப் பின், நீ துன்புறுத்தும் இயசுவே நான் என்ற குரல், அவரில் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. பவுல் தமஸ்கு நகரை அடைந்த பின், பார்வையற்றிருந்த நிலையில், அந்நாள்களில் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை(தி.பணி 9:9). மாறாக, அவர் செபத்தில் ஆழ்ந்திருந்தார். இந்நிலை, அவர் கடவுளுக்குச் செய்த துரோகத்திற்காக மிகவும் மனம் வருந்தியதன் அடையாளம். பவுல், தான் செய்த செயல் என்னவென்பதை புரிந்துகொண்டார். ஆண்டவரைத் துன்புறுத்தியுள்ளதை உணர்ந்தார். அதனால்தான் அவர் பின்னாளில், பாவிகளுள் முதன்மையான பாவி நான் (1 திமொ.1:15) என்று சொன்னார். தனது பாவநிலையைவிட்டு விலகி, ஆண்டவரால் மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்பினார். அதனால்தான் பவுல், திருமுழுக்குப் பெறும்வரை கடும் நோன்பிருந்து செபித்தார். ஆனால், அவர் திருமுழுக்குப் பெற்றவுடன், தன் நோன்பை முடித்துக்கொண்டார். நற்செய்தியாளர் லூக்கா, சவுலின் மனமாற்றம் பற்றி ஒருவரியில் இவ்வாறு சொல்கிறார். “அவர் பார்வையடைந்ததும், எழுந்து திருமுழுக்குப் பெற்றார்” (தி.பணி. 9:18). சவுல் மனமாற்றம் அடைந்த பின்னர் அவர் செய்த முதல் செயல் என்னவெனில், “உணவு அருந்தியதே (தி.பணி 9:19) ”.    

பவுல், திருமுழுக்கு பெற்றவுடன் நோன்பை முடித்துக்கொண்டார். ஏன் அவர் இவ்வாறு செய்தார்? ஒருவருக்கு திருமுழுக்கில் பாவங்கள் கழுவப் பெறுகின்றன(தி.பணி,22:16). அவை பின்னர் அந்த நபருக்கு எதிராக நினைவுகூரப்படாது(எபி.8:12). ஆதலால் பவுல், தெளிவான மனச்சான்றைக் கொண்டிருக்க முடிந்தது. கடவுள் தன்னை மன்னித்துவிட்டார் என்பதை முழுமையாக நம்பினார் பவுல். நாமும், கடவுளின் அருளுக்கேற்ப வாழும்போது, நம் பாவங்களும் கடவுளால் முழுவதும் மன்னிக்கப்படுகின்றன என்பதை உறுதியாய் நம்ப வேண்டும். இதனால் நாம் நம் பாவங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஆண்டவருக்குப் பணியாற்றத் தயாராவோம். பவுல், திருமுழுக்கு பெற்றபின் உணவு அருந்தி உடல் வலிமை பெற்றார். இதைத் தொடர்ந்து தமஸ்குவில் அவர் சிலநாள்கள் இயேசுவின் சீடர்களுடன் தங்கியிருந்தார். உடனடியாக, இயேசுவே இறைமகன் (தி.பணி 9:20) என, தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார் பவுல். என்ன அற்புதம் இது?  

யாரை வெறுத்து ஒதுக்கினாரோ, அவரையே ஆண்டவராக ஏற்றுக்கொண்டு அவரே இறைமகன் என அறிவிக்கத் தொடங்கினார் பவுல். இவரை இதற்குமுன் அறிந்த மக்களுக்கு இது புதிராக இருந்தது. தொழுகைக் கூடங்களில் இயேசுவே இறைமகன் என்று பறைசாற்றியதைக் கேட்ட மக்கள் அனைவருக்கும் மலைப்பு. எருசலேமில் இந்தப் பெயரை அறிக்கையிடுவோரை அழிக்க முற்பட்டவன் அல்லவா இவன், அவ்வாறு அறிக்கையிடுவோரைக் கைது செய்து தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்லும் எண்ணத்தோடு இங்கு வந்தவன்தானே இவன்? (தி.பணி. 9:21) என்றார்கள். ஆனால், பவுல் மென்மேலும் வல்லமை பெற்றவராய், இயேசுவே கிறிஸ்து என்பதை மெய்ப்பித்து, தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார். அன்பர்களே, திருத்தூதர் பவுல், நல்ல மனசாட்சியைக் கொண்டிருந்தவர், தான் நம்பியதைப் பேசும் குணமுடையவர். இயேசுவே ஆண்டவர் என்பதை ஆணித்தரமாக நம்பினார் அவர். நம்பியதை அச்சமின்றி எடுத்துரைத்தார் அவர். இதற்குப்பின், இயேசுவை அறிவிப்பதற்காக பவுல் மேற்கொண்ட கடினமான பயணங்கள், அனுபவித்த துன்பங்கள் கேட்பவர் மனதை உருகச் செய்வன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

           








All the contents on this site are copyrighted ©.