2017-05-15 15:55:00

வாரம் ஓர் அலசல் – உலக குடும்பங்கள் நாள் மே 15


மே,15,2017. முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்ட தாய் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். எனக்கு இப்போது வயது அறுபத்தெட்டு. எனக்கு மூன்று ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். என் மகன்கள் மூவரும் எப்போதும் நல்லவர்கள். ஆளுக்கொரு மாதம் என, என்னை அவர்கள் வீட்டில் வைத்து உணவு கொடுத்தார்கள். இப்போது நான் அவர்கள் மனைவிகளுக்குச் சுமையென இங்கே என்னை விட்டுவிட்டார்கள். என் மகன்கள் கொடுமைக்காரர்கள் என்றால், என்னை இதற்கு முன்பே கொலை செய்திருப்பார்கள் அல்லவா? பிள்ளைகள் எனக்கு ஒருபோதும்  பெரும் பாரமாக இருந்ததில்லை. நான்தான் அவர்களுக்குப் பெரும் பாரமாகி விட்டேன். இந்தத் தள்ளாத வயதிலும், என் இதயத்தில் தூளிகட்டி, அவர்களுக்கு இன்னும் தாலாட்டுப் பாடுகின்றேன். என் பிள்ளைகளைத் திட்டாதீர்கள். ஏனென்றால், அவர்கள் தன் பிள்ளைகளால் நாளைக்கு இங்கு வரக்கூடாது. போ என, என்னைப் புறந்தள்ளி விட்டாலும், உள்ளத்தில் என்றும் நான் அவர்களை உட்கார வைத்திருப்பேன். நான் பெற்ற பிள்ளைகள் நலமோடு இருக்கட்டும். நான் எதிர்கொண்ட தொல்லைகளை, என் மகன்கள் அனுபவிக்காமல் வாழட்டும்.

தன் பிள்ளைகளால் வேண்டாம் என ஒதுக்கப்பட்ட சூழலிலும், அப்பிள்ளைகளின் நலம் வேண்டுபவர் அம்மா. தாய்மார், குடும்பத்தைத் தாங்கிச் செல்லும் தூண்கள். அவர்கள், பாசாங்கு செய்யாமல் அன்புகூர்பவர்கள், ஏமாற்றாமல் கொடுப்பவர்கள், மௌனமாக துன்புறுபவர்கள், மன்னிப்பதற்கு எப்போதும் தயாராக இருப்பவர்கள் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒருமுறை சொன்னார். உலக அன்னை தினமான இஞ்ஞாயிறன்று, அன்னையருக்கு நல்வாழ்த்தும் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நாளில், நாம் எல்லாருமே, வாழ்கின்ற மற்றும், வாழ்ந்து மறைந்த நம் அன்னையரை, சிறப்பாக நினைத்து பெருமிதம் அடைந்தோம். ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறன்று அன்னையரைச் சிறப்பாக நினைக்கின்றோம். நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய, இரத்த உறவு அன்னையரை மட்டுமின்றி, இதே தாயுள்ளம் கொண்ட, தாய்மைப் பண்புள்ள எல்லாருக்குமே இந்நாளில் வாழ்த்துச் சொல்கிறோம். இவங்க என்னைப் பெறாத குறைதான், மற்றபடி, இவங்கதான் எனக்கு எல்லாமே என, எத்தனையோ பேர், எத்தனையோ மனிதர்களைச் சுட்டிக்காட்டிப் பெருமைப்படுவதைப் பார்க்கிறோம்.

இந்தப் பெருமைக்குரியவர்கள் ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. தாயுள்ளம், தாய்மை என்பது, பிள்ளைகளின் தேவை என்னவென்று, குறிப்பறிந்து செயல்படுவது. இந்த உள்ளம் தன்னலம் கருதாதது. தாயுள்ளம் கொண்ட அன்பான தந்தை ஒருவர் பற்றி இம்மாதம் ஆறாம் தேதி, முகநூலில் ஒருவர் இவ்வாறு பதிவுசெய்திருந்தார். தான் செய்துவரும் வேலையை மகள்களிடம் கூறாமல், வேறு பணி செய்வதாகக் கூறி, அவர்களைப் படிக்க வைத்து வருகிறார் அந்த அன்புத் தந்தை. அவர், தான் ஒரு நிறுவனத்தில், தொழிலாளியாக பணிபுரிவதாகக் கூறி, பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மகள்களைப் படிக்க வைத்து வருகிறார். இதற்கு அவர் கூறியுள்ள காரணம், சமுதாயத்தைத் தலைகுனிய வைக்கின்றது. “இந்தச் சமூகத்தில் என் பிள்ளைகள் சக மனிதர்கள் மத்தியில் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அவர்களை யாரும், என்னைப் போல் கீழ்த்தரமாக ஒருபோதும் நினைத்துவிடக் கூடாது. பொதுமக்கள் எப்போதும் என்னை அவமானப்படுத்துகின்றார்கள். இவ்வாறு அந்தத் தந்தை உருக்கமாகக் கூறியுள்ளார். ஒருநாள் அவரது வேலையின் இரகசியம் வெளியே தெரிய வந்தது. அன்றைய தினம் அவரது மகள்களுக்கு கல்லூரிக் கல்வி கட்டணம் செலுத்த கடைசி நாள். ஆனால், அவரிடம் போதிய பணம் இல்லை. என்ன செய்வதென்று திகைத்து, கவலையுடன் இருந்த அவருக்கு, அன்று சுத்தம் செய்யும் வேலையும் கிடைக்காதது பேரிடியாக இருந்தது. ஆனால், அவருடன் பணிபுரியும் சகத் தொழிலாளர்கள், இதையறிந்து அன்று அவர்கள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தனர். அவர் முதலில் வேண்டாம் என மறுத்துள்ளார். அப்போது அந்தத் தொழிலாளர்கள், “தேவைப்பட்டால் நாம் பட்டினியாக இருக்கலாம். ஆனால், நம் பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்”எனக் கூறியுள்ளனர். தங்கள் தந்தையின் உண்மை நிலையை அறிந்த, கல்லூரியில் படித்துவரும் அவரின் மகள்கள், தற்போது மாலை நேரங்களில் வேலைக்குச் செல்கின்றனர். தங்களுக்காக உழைத்தது போதும் என அந்தத் தந்தையை அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டனர் என அறிந்து மகிழ்ந்தோம். பிள்ளைகளின் வளர்ச்சிக்காக உடலையும், மனதையும் வருத்திக்கொண்டு அவமானங்களைக் கண்டு துவண்டுவிடாமல், உழைத்த அந்தத் தந்தையின் தாயுள்ளத்தை, அவருக்கு தேவையில் கொடுத்து உதவிய உடன் பணியாளர்களின் தாயுள்ளத்தை வாழ்த்தாமல் எப்படி இருப்பது?

பொதுவாக தேர்வு முடிவுகள் வெளியாகும்போது சில குறிப்பிட்ட மாணவ மாணவியர் ஊடகங்களில் அதிகம் பாராட்டப்படுவார்கள். கடந்த வாரத்தில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. திருச்சி மாணவி ஆஷிகா பேகம் பற்றி ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

ஆஷிகா பேகம், இவ்வாண்டு ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்குத் தயாரித்த நேரத்தில், அவரின் அம்மா நுரையீரல் புற்றுநோயால் இறந்துபோனார். அம்மாவின் மரணத்துக்குப் பிறகு, இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி என, குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு ஆஷிகாவுக்கு. அப்பா, மோர் விற்பவர். வீட்டில் கடும் பொருளாதார நெருக்கடி. கொடிய வறுமையிலும், தாயின் மரணத்துக்குப் பிறகு, இவர் தேர்வு எழுதி 1,101 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்திருக்கிறார். ஆஷிகா, திருச்சி, மதுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்து பள்ளியில் படித்தவர். ஆஷிகாவுக்கு மருத்துவராக வேண்டுமென்ற கனவு. இதற்கிடையே ஆஷிகாவின் தந்தை அப்துல் ரஹீம் அவர்கள், '' என் மகளின் உயர்கல்வியை எப்படியாவது மேற்கொள்ளச் செய்வேன்'' என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.

தாயும் தந்தையுமாக இருந்து நம்மை ஒவ்வொரு நாளும் அரவணைத்துவரும் இறையன்புக்கு நிகர் எந்த அன்புமே கிடையாது. ஆனால், மனிதர் என்ற வகையில், தன் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்று வளர்க்கும் அன்னையரிடம் மட்டுமல்ல, தாயுள்ளத்தை, தாய்மைப் பண்பைக் கொண்ட தந்தையரும், மற்ற மனிதரும் உள்ளனர் என்பதற்கு, இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். தன்னமில்லா அன்பு, கருணை, மன்னிப்பு, தியாகம், அரவணைப்பு என எல்லா நற்பண்புகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அந்த இடம்தான் அம்மா. இத்தகைய பண்புகளில் ஒன்று, டெல்லியில் டாக்சி ஓட்டும் தேவேந்திர கப்ரி, இன்னும், டெல்லி மக்களிடம் வெளிப்பட்டதை, கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே12), ஊடகங்களில் வாசித்தோம். 

இம்மாதம் மூன்றாம் தேதியன்று, தேவேந்திர கப்ரி அவர்களின் டாக்சியில், முபிஷர் வாணி என்பவர், விமான நிலையத்தில் இருந்து பஹார்கஞ்ச் வரை பயணித்துள்ளார். அப்போது, வாணி அவர்கள், எட்டு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய பையை டாக்சியிலேயே தவற விட்டுவிட்டார். சிறிது நேரம் கழித்து, டாக்சியில் ஒரு பை இருப்பதைப் பார்த்த கப்ரி அவர்கள், விமான நிலையக் காவல்துறையை அணுகினார். அவர்கள் பணத்துக்கு உரியவரைக் கண்டறிந்து, பணப் பையை அவரிடம் ஒப்படைத்தனர். தேவேந்திர கப்ரியின் நேர்மையை ஏராளமானோர் பாராட்டினர். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவியபோது, கப்ரி அவர்கள், கடனில் இருப்பது தெரிய வந்தது. தேவேந்திர கப்ரி அவர்கள், பிஹார் மாவட்டத்தின் பாங்கா பகுதியைச் சேர்ந்தவர். இவரின் தந்தை, தன் இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுப்பதற்காக 2008ம் ஆண்டில் ஒரு இலட்சம் ரூபாயை, மாதம் ஐந்து விழுக்காடு வட்டிக்கு கடனாகப் பெற்றிருந்தார். ஆனால் விவசாயியான அவரால் வட்டியைக்கூடச் செலுத்த முடியவில்லை. இதை அறிந்த தனியார் வானொலி ஒன்று, அவருக்கு நிதி திரட்டப் பிரச்சாரம் மேற்கொண்டது. அதற்கு அவர்களே எதிர்பாராத அளவு பணம் குவிந்தது. ஒரு மணி நேரத்தில் எழுபதாயிரம் ரூபாய்வரை வசூலானது. இதைத் தொடர்ந்து, சில மணித்துளிகளில் ஒரு இலட்சம் ரூபாய் கிடைத்தது.

தாய்மைப் பண்புள்ள மனிதர், எல்லா இனங்களிலும், எல்லா இடங்களிலும், எப்போதுமே வாழ்த்தப்படுகின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பது போன்று, குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும், தூக்கி நிறுத்தும் தூணாக இருப்பவர் தாய். தாய்க்குத் துணையாக உழைப்பைக் கொடுத்து குடும்பத்தை நடத்திச் செல்பவர் தந்தை. தாய் தந்தையரின் அருமை, நீ வளரும்போது தெரியாது, ஆனால் நீ பிள்ளையை வளர்க்கும்போது அது தெரியும் என்கிறார்கள். தாயிற்சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, அன்னை தந்தையே அன்பின் எல்லை என்ற நெஞ்சை உருக்கும் பாடல் வரிகளை நம்மால் மறக்க இயலாது. மே 15, இத்திங்கள் உலக குடும்பங்கள் தினம். குடும்பங்கள், கல்வி மற்றும் நல்வாழ்வு என்ற தலைப்பில் இந்நாள் சிறப்பிக்கப்பட்டது. தாங்கள் எவ்வளவு துன்புற்றாலும் பிள்ளைகள் படித்து முன்னேற வேண்டுமென தாயும் தந்தையும் உழைக்கின்றனர். பிள்ளைகளுக்குத் தரமான கல்வி வழங்க பெற்றோர் எதிர்கொள்ளும் சிரமங்களில் இதனைக் காணலாம்.  தேர்வுக் காலங்களிலும், அவர்களை உயர்கல்விக்கு அனுப்புவதிலும், பிள்ளைகளுக்கு வேலை தேடுவதிலும் பெற்றோர் எவ்வளவு தியாகம் செய்கின்றனர் என்பதை நாம் அறிவோம். தாங்கள் மட்டுமல்ல மற்றவரும் வாழவேண்டுமென்று தியாகம் செய்யும் குடும்பங்களும் உள்ளன.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளான மனோஜ் பட்டேல், சரிதா லேகர் ஆகிய இருவரும், ஆடம்பர திருமணத்தைத் தவிர்த்து, தங்கள் திருமணத்துக்காக செலவிடப்படவிருந்த தொகையை, தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர். கோல்ஹாபூர் மாவட்டத்தின் நர்சோபாச்சி பகுதியிலுள்ள கோவில் ஒன்றில், கடந்த ஏப்ரல் 28ம் தேதி, இவர்களின்  திருமணம் மிக எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு இந்த காவல்துறை தம்பதிகள் தங்கள் திருமண செலவுக்காக வைத்திருந்த தொகையை, தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர். வழக்கமாக காதல் திருமணங்களில்தான் இதுபோன்று புதுமைகளை புகுத்துவார்கள், ஆனால் மனோஜ்-சரிகா தம்பதியரைப் பொருத்தவரை, இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

உலக குடும்பங்கள் நாளில், குடும்பத்தை நடத்திச் செல்லும் பெற்றோரின் தியாகங்களை நினைத்துப் போற்றுவோம். வத்திக்கான் வானொலி நேயர் குடும்பங்களுக்கு எம் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள். தன்னலமற்றது தாயின் நெஞ்சம்...அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு, பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு, கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று, கருணையில், தாயும் கடவுளும் ஒன்று. தாயும் தந்தையுமாக இருக்கும் கடவுளிடம் அனைத்துக் குடும்பங்களையும் அர்ப்பணிக்கின்றோம். நம் குடும்பங்களில் அன்பும், மன்னிப்பும், சமாதானமும் நிலவுவதாக. திருமணம் மற்றும் குடும்ப வாழ்வு சிதைந்து வரும் இந்நவீன காலத்தில், இவையிரண்டின் விழுமியங்கள் பேணிக் காக்கப்படுவதாக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.