2017-05-13 15:50:00

பாத்திமா திருத்தலத்தில் வெள்ளி மாலை நிகழ்வுகள்


மே,13,2017. பாத்திமாவில் அன்னை மரியா காட்சியளித்ததன் நூறாம் ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, மே 12, இவ்வெள்ளி பிற்பகல் இரண்டு மணிக்கு உரோம் நகரிலிருந்து புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருத்தந்தை, இது செபத்தின் பயணம், ஆண்டவரையும், அன்னை மரியாவையும் சந்திக்கும் ஒரு சிறப்பான பயணம் என்றார். போர்த்துக்கல் நாட்டின் Monte Real இராணுவ விமானத்தளத்தை உள்ளூர் நேரம் மாலை 4.20 மணிக்குச் சென்றடைந்த திருத்தந்தையை, அந்நாட்டு அரசுத்தலைவர் Marcelo Nuno Duarte Rebelo de Sousa,  அரசு மற்றும், திருஅவை அதிகாரிகள் வரவேற்றனர். மலர்களால் நிரப்பப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் நடந்துவந்த திருத்தந்தை, அரசு மரியாதையுடன் இடம்பெற்ற வரவேற்பில் கலந்துகொண்ட பின், அந்த விமான நிலையத்தில், ஓர் அறையில் அரசுத்தலைவரைச் சந்தித்தார். அவ்விமான நிலையத்தின் சிற்றாலயம் சென்று, தங்கப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். இங்கு பணியாற்றுகின்ற மற்றும் அவர்களின் உறவினர்களை அன்னை மரியிடம் அர்ப்பணிக்கின்றேன்.  இவர்கள் பொது நலனுக்கும் அமைதிக்கும் பிரமாணிக்கமுள்ள பணியாளர்களாகப் பாதுகாப்பாகப் பணியாற்ற அன்னை மரியிடம் செபிக்கின்றேன் என எழுதினார்.

பின் அவ்விமான நிலையத்திலிருந்து திறந்த காரில் வந்த திருத்தந்தை, காட்சிகள் சிற்றாலயம் சென்று, அன்னை மரியா திருவுருவத்தின் முன்பாக, முதலில், அமைதியாகச் செபித்தார். மக்கள் மத்தியில் நல்லிணக்கம் உட்பட பல கருத்துக்களுக்காகச் செபித்தார் திருத்தந்தை. பின்னர், அன்னையின் திருவுருவத்தின் முன்பாக, இலைகளுடன் மூன்று பொன்ரோஜாக்கள் நிறைந்த மலர்க் கொத்து ஒன்றைச் சமர்ப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.