2017-05-13 16:31:00

பாத்திமா திருத்தலத்தில் திருவிழிப்பு திருவழிபாடு


மே,13,2017. இவ்வெள்ளி இரவு 9.30 மணிக்கு பாத்திமா திருத்தலத்தில் நடந்த மெழுகுதிரி பவனியில் முதலில் திருத்தந்தை பாஸ்கா மெழுகுதிரியை ஏற்றினார் திருத்தந்தை. அங்கு கூடியிருந்த ஆறு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் மெழுகுதிரிகளை ஏந்தியிருந்தனர். இதில் திருத்தந்தை மறையுரை ஆற்றினார்.

பின் ஒளியின் மறையுண்மை செபமாலையைத் தொடங்கி வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பவனி முடிந்தபின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருவிழிப்புத் திருப்பலியை நிறைவேற்றினார். அன்னை மரியா கேட்டுக்கொண்டபடி, நாம் தொடர்ந்து செபிக்க வேண்டும். நம் செபங்களுக்கு மத்தியிலும், போர்கள் தொடர்கின்றன என்றால், நாம் இடைவிடாமல் செபிக்க வேண்டும். மரியின் மாசற்ற இதயத்திற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று மறையுரையில் கூறினார், கர்தினால் பரோலின்.

திருத்தந்தையர் அருளாளர் ஆறாம் பவுல், புனித 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரும் பாத்திமா திருத்தலம் சென்றுள்ளனர். தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் சென்றுள்ளார். அன்னை மரியா கிறிஸ்துவின் இரக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறார். பாத்திமா அன்னை மரியிடம், போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இவ்வுலகில் தீமைகள் விலகி, அமைதி நிலவச் செபிப்போம். இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பத்து போர்த்துக்கீசிய இராணுவத்தினர் உட்பட்ட குழு ஒன்று, வத்திக்கானிலிருந்து பாத்திமாவுக்கு 2,782 கிலோ மீட்டர் தூரம், 17 நாள்கள் கொண்ட, அமைதியின் திருப்பயணம் ஒன்றை, சைக்கிளில் மேற்கொண்டு இவ்வெள்ளியன்று நிறைவு செய்துள்ளனர். திருத்தலத்திற்கு ஒரு வாகனம் ஒன்றையும் பரிசளித்துள்ளனர். திருத்தந்தை டுவிட்டரில் கூறியுள்ளது போன்று, அன்னையே, இயேசுவை எங்களுக்குக் காட்டும் என, அன்பர்களே, அன்னையிடம் நம்மை அர்ப்பணிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.