2017-05-13 14:20:00

நோயுற்றோரிடம் திருத்தந்தை பகிர்ந்து கொண்ட வார்த்தைகள்


மே,13,2017. நோயுற்றிருக்கும் அன்பு சகோதர, சகோதரிகளே, நான் மறையுரையில் சொன்னதுபோல், அவர் எப்போதும் நமக்கு முன் சென்று, நம் அனுபவங்கள் அனைத்தையும் ஏற்கனவே அவர் ஏற்றுக்கொள்கிறார்.

துன்பம், பாடுகள் என்பனவற்றின் பொருளை முற்றிலும் உணர்ந்தவர், இயேசு. துன்பங்களை அனுபவித்த புனித பிரான்சிஸ்கோ, புனித ஜசிந்தா, இன்னும் எத்தனையோ புனிதர்களின் துன்பங்களை அவர் புரிந்துகொள்கிறார்; அவற்றைத் தாங்கும் சக்தியை வழங்குகிறார்.

எருசலேமில் புனித பேதுரு சிறையில், சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தபோது, அவருக்காக திருஅவை முழுவதும் செபித்தது. ஆண்டவரும் பேதுருவுக்கு ஆறுதல் அளித்தார். இதுவே திருஅவையின் பணி: உங்களைப்போல் துன்புறுவோருக்கு ஆறுதல் அளிக்குமாறு ஆண்டவரிடம் திருஅவை கேட்கிறது. ஆண்டவர், நீங்கள் காணமுடியாத வழிகளில் உங்களுக்கு ஆறுதல் வழங்குகிறார்.

அன்பு திருப்பயணிகளே, நற்கருணையில் மறைந்து வாழும் இயேசு நமக்குமுன் இருக்கிறார். நமது சகோதர, சகோதரிகளின் காயங்களில் அவர் மறைந்து வாழ்கிறார். பீடத்தின் மேல், அவரது திரு உடலை ஆராதனை செய்கிறோம். நோயுற்ற நம் சகோதர, சகோதரிகளில், இயேசுவின் காயங்களை நாம் சந்திக்கிறோம்.

"நீங்கள் கடவுளுக்கு உங்களை ஒப்புக்கொடுக்க விருப்பமா?" என்று நூறு ஆண்டுகளுக்கு முன், கன்னி மரியா, ஆடு மேய்த்த சிறாரிடம் கேட்டதை, இன்று நம்மிடம் கேட்கிறார். அக்குழந்தைகள், "ஆம், நாங்கள் விரும்புகிறோம்" என்று சொன்னதை, நாம் இன்று புரிந்துகொள்கிறோம், அவர்களைப் பின்பற்ற விழைகிறோம்.

நோயுற்றிருக்கும் நீங்கள், உங்கள் வாழ்வை ஒரு கொடையாக வழங்க உங்களை அழைக்கிறேன். பிறரன்பு உதவிகளைப் பெறுபவராக மட்டுமல்லாமல், அதைத் தருபவராகவும், திருஅவையின் வாழ்வில் முழுமையாகப் பங்கேற்பவராகவும் மாற, உங்களை அழைக்கிறேன்.

வெள்ளமென வெளிப்படும் வார்த்தைகளைக் கொண்டு சொல்லப்படும் செபங்களைவிட, அமைதியில் நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள், உன்னதமான செபங்கள். நீங்கள் திருஅவையின் கருவூலம் என்பதைக் குறித்து வெட்கமடையாதீர்கள்.

திருநற்கருணையில் வீற்றிருக்கும் இயேசு, உங்களருகே இப்போது கடந்து செல்லவிருக்கிறார். அவரிடம், உங்கள் துன்பங்கள், வலிகள், சோர்வு, அனைத்தையும் ஒப்படையுங்கள். உலகெங்கும் பரவியுள்ள திருஅவையிலிருந்து உங்களுக்காக எழும் செபங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இறைவன் நம் தந்தை. அவர் உங்களை ஒருபோதும் மறக்கமாட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.