2017-05-12 16:06:00

பாசமுள்ள பார்வையில்.. அற்புதங்களின் அன்னை


பிரேசில் நாட்டில் 2013ம் ஆண்டில் ஒரு நாள், ஐந்து வயது நிரம்பிய லூக்கா, தனது சிறிய சகோதரி எத்வார்தாவுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, லூக்கா, ஜன்னல் வழியாக, கீழே தரையில் விழுந்துவிட்டான். ஜன்னல், தரையிலிருந்து 6.5 மீட்டர் உயரத்திலிருந்தது. மருத்துவ அவசர சிகிச்சை வாகனத்தில் சிறுவனை எடுத்துக்கொண்டு மருத்துவமனை செல்வதற்கு ஒருமணி நேரம் ஆகியது. அதற்குள் சிறுவன் கோமா நிலைக்குச் சென்று விட்டான். இருமுறை மாரடைப்பும் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், சிறுவனுக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, இவன் உயிர் பிழைப்பது கடினம். அப்படியே பிழைத்தாலும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியாகவோ அல்லது எதுவுமே செய்ய இயலாத ஓர் ஆளாகவோதான் இருப்பான் எனச் சொல்லிவிட்டனர். இதற்குப் பின்னர் சிறுவனின் தந்தை ஜூவாவோ பாப்டிஸ்டா (Joao Baptista), அவனின் அம்மா, பிரேசில் நாட்டிலுள்ள கார்மேல் சபை அருள்சகோதரிகள் ஆகிய எல்லாரும் சேர்ந்து, அருளாளர்கள் ஜசிந்தா மற்றும், பிரான்சிஸ்கோவிடம் உருக்கமாக, இடைவிடாமல் செபித்து வந்தனர். அதன் பயனாக. லூக்காவுக்குப் பொருத்தியிருந்த மருத்துவக் கருவிகளை, அடுத்த ஆறு நாள்களுக்குப் பின், மருத்துவர்கள் அகற்றி விட்டனர். லூக்கா நன்றாக எழுந்து பேசத் தொடங்கினான். அவனது சிறிய சகோதரி பற்றி அவன் கேட்டான். அடுத்த ஆறு நாள்களில் அவனை வீட்டிற்கு அனுப்பி விட்டனர் மருத்துவர்கள். இவன் குணமானது பற்றி மருத்துவர்களால் விவரிக்க இயலவில்லை. இப்போது லூக்கா வழக்கம்போல் நன்றாக உள்ளான். இந்தப் புதுமையே, பாத்திமாவில் அன்னை மரியாவைக் காட்சியில் கண்ட அருளாளர்கள் ஜசிந்தா மற்றும், பிரான்சிஸ்கோ, புனிதர்களாக உயர்த்தப்பட காரணமாக அமைந்துள்ளது. தன் மகன் அற்புதமாய் குணமடைந்தது பற்றி, பாப்டிஸ்டா அவர்கள், மே 11, இவ்வியாழனன்று, பாத்திமா திருத்தலத்தில் அனைவர் முன்னிலையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.