2017-05-12 16:16:00

19வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது


மே,12,2017. இயேசுவின் தாய் அன்னை மரியா, அற்புதங்களின் அன்னை. இவர், உலக வரலாற்றில், பல தருணங்களில், பல்வேறு இடங்களில் தோன்றி, பல புதுமைகளை நிகழ்த்தி, உலகினரின் வாழ்வு நெறிப்பட, செய்திகளை வழங்கியுள்ளார். இக்காலத்திலும், இவர் தொடர்ந்து காட்சிகள் அளித்து வருகிறார் என அறிகிறோம். இவ்வாறு அன்னை மரியா அளித்துள்ள நூற்றுக்கணக்கான காட்சிகளில், வேளாங்கண்ணி, லூர்து, பாத்திமா, குவாதலூப்பே, அப்பரெசிதா போன்ற ஊர்களில் இடம்பெற்ற காட்சிகள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. 1914ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி தொடங்கிய அந்த மாபெரும் போர், அதாவது முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலம் அது. ஐரோப்பாவில் தொடங்கிய அந்தப் போரில், ஆறு கோடிக்கு மேற்பட்ட ஐரோப்பியர் உட்பட, ஏழு கோடிக்கு அதிகமான இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி நிறைவுக்கு வந்த அந்தப் போரில், ஒன்பது கோடிக்கு மேற்பட்ட இராணுவத்தினரும், ஏழு கோடிக்கு மேற்பட்ட அப்பாவி குடிமக்களும் இறந்தனர். இந்தத் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில், 1917ம் ஆண்டு நவம்பரில், இரஷ்யாவின் மாஸ்கோவில் விளாடுமீர் லெனின் என்பவர், சோவியத் யூனியன் என்ற ஒரு பகுதியை உருவாக்குவதற்கு, ஒரு கம்யூனிசப் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். இப்பூமியில் வாழும் ஏறக்குறைய பாதி மக்கள், இந்த வளையத்திற்குள் வரவேண்டிய நிலை ஏற்பட்டுக்கொண்டிருந்தது. போர்த்துக்கல் நாட்டிலும், அருள்பணியாளர்க்கு எதிரான ஒரு போக்கு நிலவியது. அக்காலக்கட்டத்தில், இவ்வுலகில் நிலவிய அறநெறி மற்றும், சமூகத் தீமைகளுக்கு மாற்று மருந்தை வழங்குவதற்கு, விண்ணகம் மண்ணகத்திற்கு இறங்கி வந்தது. அந்நிகழ்வுதான், போர்த்துக்கல் நாட்டின்,  பாத்திமாவில், இறைவனின் தாயாம் அன்னை மரியா, லூசியா தோஸ் சாந்தோஸ், இவருடைய உறவினர்களான பிரான்சிஸ் மார்த்தோ, ஜசிந்தா மார்த்தோ ஆகிய மூன்று இடையர் சிறாருக்குக் காட்சியளித்து, உலகினர் மனம் மாற வேண்டியதன் அவசியத்தை தெரிவித்தார். அதற்கு மக்கள் செய்யவேண்டிய காரியங்களையும் இச்சிறார் வழியாக வெளிப்படுத்தினார். இந்நிகழ்வின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் நிறைவு, மே 13, இச்சனிக்கிழமையன்று பாத்திமாவில் நடைபெறுகின்றது. இதனை தலைமையேற்று நடத்துவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே,12, இவ்வெள்ளி பிற்பகலில் வத்திக்கானில், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்பட்டார். இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர், பலவழிகளில் துன்புறும் ஆறு பெண்களைச் சந்தித்தார். இப்பெண்களில் இருவர் தங்கள் பிள்ளைகளுடன் வந்திருந்தனர். மேலும், இவ்வெள்ளி மாலையில், உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று, இத்திருத்தூதுப் பயணத்திற்காக அன்னை மரியாவிடம் செபித்தார் திருத்தந்தை.  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 12, இவ்வெள்ளி பிற்பகல் இரண்டு மணிக்கு, அதாவது இந்திய நேரம், இவ்வெள்ளி மாலை 5.30 மணிக்கு, உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து A321 ஆல்இத்தாலியா விமானத்தில், போர்த்துக்கல் நாட்டு பாத்திமா நகருக்குப் புறப்பட்டார். 1860 கிலோ மீட்டர் தூரம் மற்றும், மூன்று மணி இருபது நிமிடங்கள் கொண்ட இவ்விமானப் பயணத்தில், அவர் கடந்து சென்ற இத்தாலி, பிரான்ஸ், இஸ்பெயின் ஆகிய நாடுகளின் அரசுதலைவர்களுக்கு, தனது ஆசீருடன் நல்வாழ்த்தையும் தெரிவிக்கும் தந்திகளையும் அனுப்பினார் திருத்தந்தை. போர்த்துக்கல் நாட்டில் அதிகாரப்பூர்வ வரவேற்பு, அந்நாட்டு அரசுத்தலைவர் Marcelo Nuno Duarte Rebelo de Sousa அவர்களைச் சந்தித்தல், காட்சிகள் சிற்றாலயத்தில் செபித்தல், மெழுகுதிரி பவனியை ஆசீர்வதித்தல் ஆகிய நிகழ்ச்சிகள், இந்த முதல் நாள் பயணத் திட்டத்தில் உள்ளன. பாத்திமா அன்னை விழாவாகிய மே 13, இச்சனிக்கிழமையன்று, அருளாளர்கள் ஜசிந்தா, பிரான்சிஸ்கோ ஆகிய இருவரையும், புனிதர்களாக உயர்த்தும் திருப்பலியை நிறைவேற்றி, பிற்பகலில் அங்கிருந்து புறப்பட்டு, இரவு 7 மணி 5 நிமிடங்களுக்கு உரோம் வந்து சேர்வார், திருத்தந்தை பிரான்சிஸ். "மரியன்னையுடன், நம்பிக்கையின், அமைதியின் திருப்பயணியாக’என்ற தலைப்பில் நடைபெறும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 19வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம், இத்துடன் நிறைவுக்கு வரும்.

போர்த்துக்கல் நாடு, தென்மேற்கு ஐரோப்பாவில், இபேரியன் தீபகற்பத்தில் அமைந்துள்ள, இறையாண்மை மிக்க நாடாகும். இந்நாட்டிற்கு மேற்கிலும், தெற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும், கிழக்கிலும் வடக்கிலும் இஸ்பெயின் நாடும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டில், 1910ம் ஆண்டில் இடம்பெற்ற புரட்சிக்குப் பின்னர், முடியாட்சி அகற்றப்பட்டு, முதல்முறையாக குடியாட்சி அமைக்கப்பட்டது. ஐரோப்பாவின் மிகப் பழைய அரசு என்ற பெருமையையும் பெற்றுள்ள இந்நாடு, 15ம், 16ம் நூற்றாண்டுகளில், நாடுகள் கண்டுபிடிப்புக் காலத்தின் முன்னோடியாக விளங்கியது. 1498ம் ஆண்டில், இந்நாட்டின் வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்து, அந்நாட்டிற்கு வளமையைக் கொண்டு சேர்த்தார். 1500ம் ஆண்டில், Pedro Álvares Cabral என்பவர், பிரேசில் நாட்டைக் கண்டுபிடித்து, அதைப் போர்த்துக்கல் நாட்டுக்கு உடமையாக்கினார். போர்த்துக்கல் பேரரசு, ஏறக்குறைய 600 ஆண்டுகள், உலகில் காலனி ஆதிக்கத்தையும் கொண்டிருந்தது. இந்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாத்திமா நகரத்திற்குப் பெயர்க் காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. மூர் இன இளவரசியாகிய பாத்திமா, பிரபு Gonçalo Hermigues மற்றும் அவரின் ஆட்களால் கடத்தப்பட்டு, குன்றுகளில் அமைந்திருந்த Serra de Aire என்ற கிராமத்தில் வைக்கப்பட்டார். அந்த இடம் அப்போதுதான் போர்த்துக்கீசிய முடியாட்சியாக உருவாக்கப்பட்டிருந்தது. இளவரசி பாத்திமா, தன்னைக் கடத்தியவர் மீது காதல் வயப்பட்டு அவரைத் திருமணம் புரிய விரும்பினார். அதற்கு நிபந்தனையாக, பாத்திமா கிறிஸ்தவராக மாற வேண்டும் என்று கூறப்பட்டது. பாத்திமாவும், திருமுழுக்குப் பெற்றார், Oureana என்ற புதுப் பெயரையும் ஏற்றார் எனச் சொல்லப்படுகிறது. 1917ம் ஆண்டு மே 13ம் தேதி முதல், அவ்வாண்டு அக்டோபர் 13ம் தேதி வரை அன்னை மரியாவை காட்சியில் கண்ட மூன்று சிறாரும், பாத்திமாவின் ஒரு சிறிய பகுதியாகிய, Aljustrel என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள்.

1916ம் ஆண்டு வசந்த காலத்தில் ஒரு நாள், ஒன்பது வயது லூசியா தோஸ் சாந்தோஸ்,  எட்டு வயது பிரான்சிஸ் மார்த்தோ, ஆறு வயது ஜசிந்தா மார்த்தோ ஆகிய மூன்று சிறாரும், பாத்திமாவுக்கு அருகிலுள்ள கோவா த இரியா என்ற பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். மழை பெய்யத் தொடங்கியதால், அம்மூவரும் அருகிலிருந்த குகைக்குச் சென்று மதிய உணவை அருந்திவிட்டு செபமாலை செபித்தனர். மழையும் ஓய்ந்தது. அச்சிறார் விளையாடத் தொடங்கினர். அப்போது திடீரென பெருங்காற்று வீசியது. வெண்மைநிற ஒளி அச்சிறாரைச் சூழ்ந்து கொண்டது. அந்த ஒளிக்கு மத்தியில் தோன்றிய மேகத்தில் ஓர் இளைஞர் தோன்றினார். பயப்படாதீர்கள், நான் அமைதியின் வானதூதர், என்னோடு சேர்ந்து செபியுங்கள் என்று சொன்னார் அந்த இளைஞர். மேலும், "நான் போர்த்துக்கல் நாட்டின் காவல் தூதர், நீங்கள் பாவிகளுக்காகச் செபிக்க வேண்டும்" என்றும் அவர் அச்சிறாரிடம் கூறினார். இதேபோல் அவ்வாண்டு கோடையிலும், இலையுதிர்க் காலத்திலும் வானதூதர் தோன்றி பாவிகளின் மனமாற்றத்துக்காகச் செபிக்கக் கூறினார். வானதூதரின் இந்த மூன்று காட்சிகளும் அன்னைமரியாவின் காட்சிகளுக்கு அந்த மூன்று சிறாரையும் தயாரிப்பதுபோல் இருந்தன.

1917ம் ஆண்டு மே 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று லூசியா, பிரான்சிஸ், ஜசிந்தா ஆகிய மூன்று சிறாரும் பாத்திமாவுக்கு ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திலுள்ள கோவா த இரியா என்ற இடத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு, விளையாடிக்கொண்டிருந்தனர் அப்போது மின்னல் போன்ற ஓர் ஒளி வானத்திலிருந்து அச்சிறாரை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தது. பயந்து நடுங்கிய சிறார் சுற்றிலும் பார்த்தனர். வானம் தெளிவாக இருந்தது. சூரியக் கதிர்களும் கடுமையாக வீசிக்கொண்டிருந்தன. வீட்டுக்குப் போய் விடலாம் என்று எண்ணி, அவர்கள் குன்றிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தபோது மீண்டும் அதேமாதிரியான ஒளி. அந்த ஒளிவந்த திசையை நோக்கிப் பார்த்தபோது அங்கு ஒரு பெண் வெண்ணிற ஆடை அணிந்து, சூரியனைவிட ஒளிமிகுந்து காணப்பட்டார். அப்பெண் அச்சிறாரிடம், பயப்பட வேண்டாம், நான் உங்களை எதுவும் செய்யமாட்டேன் என்று சொன்னார். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று சிறார் கேட்க, நான் விண்ணகத்திலிருந்து வருகிறேன் என்றார் அப்பெண். பின்னர் லூசியா அப்பெண்ணிடம், நீங்கள் என்னிடமிருந்து என்ன விரும்புகிறீர்கள் என்று கேட்க, நீங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதத்தின் 13ம் தேதியன்று இதே நேரத்துக்கு இங்கு வரவேண்டும், ஆறாவது தடவையில் நான் யார் என்று சொல்வேன் என்று சொன்னார். நீங்கள் உங்களைக் கடவுளுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு அச்சிறார் ஆம் என்றனர். அதற்கு அப்பெண், கடவுள் மகிழ்ச்சியோடு அனுப்பும் துன்பங்களை பாவிகளின் மனமாற்றத்திற்காக ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் நிறையத் துன்புற வேண்டியிருக்கும், ஆயினும் கடவுளின் அருள் உங்களைத் தாங்கிப் பிடிக்கும் என்று சொன்னார். பின்னர் தனது கரங்களைத் திறந்து தாய்க்குரிய பாசத்தைக் காட்டினார். பின்னர் ஓர் ஒளியில் அப்பெண் மறைந்தார். மறைந்து கொண்டிருக்கும்போதே, உலகில் அமைதி கிடைக்கவும், போர் முடியவும் தினமும் செபமாலை செபியுங்கள் என்று சொன்னார் அப்பெண். அவர்தான் அன்னைமரியா. அன்னைமரியா இச்சிறாருக்கு காட்சிகள் கொடுத்தபோது, உலகில் முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்னைமரியா அந்த மூன்று சிறாரிடம் கூறியதுபோல, அவர்கள் இன்னும் 50 பேருடன் அவ்வாண்டு ஜூன் 13ம் தேதி அவ்விடத்தில் அதேநேரத்தில் செபமாலை செபித்துக் கொண்டிருந்தனர். இக்காட்சியில் லூசியா நீண்ட நாள்கள் இவ்வுலகில் வாழ்வார் என்பது குறித்து அன்னைமரியா கூறினார். லூசியா தனது 97வது வயதில் 2005ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி உள்ளூர் நேரம் மாலை 5.25 மணிக்கு இறந்தார். ஆனால் பிரான்சிஸ் 1919ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதியன்றும், ஜசிந்தா 1920ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதியன்றும் இறந்தனர்.

1917ம் ஆண்டு ஜூலை 13ம் தேதியன்று லூசியா, பிரான்சிஸ், ஜசிந்தா ஆகிய மூன்று சிறாருக்கு மூன்றாவது தடவையாகக் காட்சி கொடுத்தார் அன்னைமரியா. இக்காட்சியில் இரஷ்யாவை தனக்கு அர்ப்பணிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். செப்டம்பர் 13ம் தேதியன்று இடம்பெற்ற ஐந்தாவது காட்சியின்போது அச்சிறாருடன் ஏறக்குறைய 30 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். அவர்கள் அனைவரும் செபமாலை செபித்துக்கொண்டிருந்தபோது அதே மரத்துக்கு மேலே அன்னைமரியா காட்சி கொடுத்தார். போர் முடிவதற்காகத் தொடர்ந்து செபமாலை செபியுங்கள் என்றார் அன்னை மரியா.

அக்டோபர் 13ம் தேதி அன்னை மரியா அளித்த காட்சியின்போது நம் பருவமழை கொட்டியது. எழுபதாயிரம் பேர் கூடியிருந்தனர். லூசியா அன்னையிடம், நீங்கள் என்னிடமிருந்து என்ன விரும்புகிறீர்கள் என்று கேட்க, அதற்கு அன்னைமரியா, நானே செபமாலையின் அன்னைமரியா, இங்கு என் பெயரில் ஓர் ஆலயம் கட்டப்பட வேண்டும், மக்கள் தொடர்ந்து தினமும் செபமாலை செபிக்க வேண்டும், போர் முடியும், படைவீரர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவர் என்று தெரிவித்தார். மக்கள் கடவுளைப் புண்படுத்தக் கூடாது, ஏற்கனவே கடவுள் பாவிகளால் அதிகம் புண்பட்டுள்ளார் என்று கூறினார். அன்னை மரியா பாத்திமாவில் இம்மூன்று சிறாரிடம் கேட்டுக்கொண்டபடி, போர் மேகம் சூழ்ந்துள்ள இக்காலத்தில், போர்கள் முடிவடையவும், போர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் அன்னை மரியாவிடம் செபிப்போம். நோயுற்றோருக்கு மருத்துவ உதவிகள் புரியும் செவிலியர் உலக தினமான மே 12ம் தேதி, இவ்வெள்ளியன்று, செவிலியர்களுக்காக பாத்திமா அன்னையிடம் செபிப்போம்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.