2017-05-09 15:51:00

ஜகார்த்தா ஆளுனருக்கு சிறைத் தண்டனை, கிறிஸ்தவர்கள் அதிருப்தி


மே,09,2017. இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தா ஆளுனர் பசுக்கி ஜஹாஜா புர்னாமா (Basuki Tjahaja Purnama) அவர்கள், தெய்வநிந்தனை குற்றத்தின்பேரில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து, கத்தோலிக்கர் உட்பட, அந்நாட்டினர் பலர் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

வருகிற அக்டோபரில் தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்யவிருந்த, கிறிஸ்தவரான ஆளுனர் பசுக்கி அவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக மத உணர்வைத் தூண்டிவிட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், வட ஜகார்த்தாவிலுள்ள ஒரு நீதிமன்றம், இச்செவ்வாயன்று அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்து, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இத்தீர்ப்பை வெளியிட்ட Dwiarso Budi Santiarso என்பவரின் தலைமையிலான நீதிபதிகள் குழு, இச்செவ்வாயன்றே அவர் சிறையில் அடைக்கப்படவும் உத்தரவிட்டுள்ளது. ஆளுனர் பசுக்கி அவர்கள் Cipinang சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

"அஹோக் (Ahok)" என மக்களால் அழைக்கப்படும் ஆளுனர் பசுக்கி அவர்கள், சீனக் குடும்ப மரபைச் சேர்ந்த கிறிஸ்தவர். இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழ்கின்ற இந்தோனேசியாவில், இஸ்லாமியர் அல்லாத நபர் என்ற வகையில், இவர் சிறப்புக்குரியவராக அந்நாட்டு கிறிஸ்தவர்களால் மதிக்கப்படுகிறார் எனச் செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே, இந்தத் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக பசுக்கி ஜஹாஜா புர்னாமா தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு இந்தோனேசியாவில் வாழும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என, மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.