2017-05-06 17:04:00

ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பேச்சுவர தாமதம்


மே,06,2017. எவ்வளவுக்கு அதிகமாக குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறார்களோ, அதற்கேற்றாற்போல அவர்கள் பேசும் திறன் தாமதமாகக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த ஆய்வில், முப்பது நிமிடங்களுக்கு அதிகமாக கையில் ஸ்மார்ட்ஃபோன் போன்ற கருவிகளை வைத்திருக்கும்போது, அவர்கள் தெளிவாகப் பேசும் திறன் 49 விழுக்காடு தாமதமாகிறது என தெரியவந்துள்ளது.

இது குறித்துப் பேசிய, கனடா நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கேத்தரின் பேர்கென் அவர்கள், "இன்று எல்லாரிடமும் கையில் ஒரு கருவி இருக்கிறது. குழந்தைகள் நலனுக்கான புதிய வழிகாட்டுதல்களில், குழந்தைகள் கைபேசி போன்ற கருவிகளைப் பார்க்கும் நேரம் குறைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

குழந்தைகள் மற்றும் சிறார், ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இப்போதுதான் முதல் முறையாக, அவர்கள் கைபேசி பயன்படுத்தும் நேரத்துக்கும், பேசும் திறனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது" என்று, பேர்கென் மேலும் கூறினார்.

அதேநேரத்தில், குழந்தைகள் மற்றவர்களுடன் பேசுவது, உடல் மொழி, சைகை போன்றவற்றிற்கும், மொபைல் கருவிகள் பயன்பாட்டுக்கும் தொடர்பு இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள், சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த குழந்தைகள் நல மருத்துவ கல்வி சங்கங்களின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

6 மாதங்கள் முதல் 2 வயது வரை இருக்கும் 894 குழந்தைகள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது பெற்றோரிடம் பேசியபோது, 20 விழுக்காட்டு குழந்தைகள், தினமும் சராசரியாக 28 நிமிடங்கள் கைபேசி, டாப்லெட் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.