2017-05-06 16:59:00

வெனெசுவேலா நெருக்கடிக்கு, அரசு பொறுப்பேற்க மறுப்பு


மே,06,2017. வெனெசுவேலா நாட்டில், அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும்வேளை, மக்கள் பசியால் வாடும் நிலையும், நாடெங்கும் பரவலாக அதிகரித்து வருகின்றதென கவலை தெரிவித்தார், அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

வெனெசுவேலா நாடு தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைக்கு, அரசுத்தலைவர் Nicolas Maduro அவர்களின் அரசு பொறுப்பேற்கத் தொடர்ந்து மறுத்து வருகிறது என்றும் கூறினார், அந்நாட்டின் Merida பேராயர், கர்தினால் Baltazar Porras Cardozo.

வெனெசுவேலா நாடு எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைக்கு, எதிர்க்கட்சி அல்லது, அந்நாட்டில் நுழைய விரும்பும் மற்ற சக்திகள் பொறுப்பு என்று அரசு குறை கூறுவதாகவும், நாட்டில் காணப்படும் பொதுவான பதட்டநிலைக்கு கத்தோலிக்கத் திருஅவையும் குறை கூறப்படுகிறது என்றும் கூறியுள்ளார், கர்தினால் Porras Cardozo

மேலும், அந்நாட்டு ஆயர்கள் இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவு, மருந்து, சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவையே, தற்போது நாட்டிற்குத் தேவைப்படுகின்றன என்றும், பொதுமக்களின் நியாயமான போராட்டங்களை அடக்கியது போதும் என்றும், கூறியுள்ளனர். அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் தேவையில்லை, அதனை அமல்படுத்தினாலே போதும் எனவும் ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.

மேலும், வெனெசுவேலா ஆயர்களின் காரித்தாஸ் நிறுவனம், பசியால் வாடும் மக்களுக்கு உணவு வழங்கி வருகிறது என, பீதேஸ் செய்திக் குறிப்பு கூறுகிறது. 

ஆதாரம் : CWN/ Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.