2017-05-06 16:33:00

திருத்தந்தை, சுவிட்சர்லாந்து அரசுத்தலைவர் Leuthard சந்திப்பு


மே,06,2017. சுவிஸ் கார்ட்ஸ் குழுமத்தின் விழாவாகிய மே 06, இச்சனிக்கிழமை காலையில், சுவிட்சர்லாந்து கூட்டுக்குடியரசின் அரசுத்தலைவர் Doris Leuthard அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

Leuthard அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்த பின், திருப்பீடச் செயலர் கர்தினால், பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் காலகர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்கள் ஆற்றிவரும் தாராளப் பணிகளுக்குப் பாராட்டும் நன்றியும் இச்சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்டதோடு, திருப்பீடத்திற்கும், சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள், மேலும் உறுதிப்படுவதற்கு, இருதரப்பினரும் தங்களின் ஆவலைத் தெரிவித்தனர் என்றும், திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

சுவிட்சர்லாந்து அரசுக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே இடம்பெறும் ஒத்துழைப்பு மேலும் வளர்வதற்கு ஆவல் தெரிவிக்கப்பட்டது என்றும், ஐரோப்பியக் கண்டத்தின் வருங்காலம், தொழில் உலகம் இளையோருக்கு முன்வைக்கும் சவால்கள், பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பொதுவான தலைப்புகள் பற்றியும், கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் மேலும் தெரிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.