2017-05-06 16:41:00

கிரேக்க மெல்கித்திய முதுபெரும் தந்தையின் பணி ஓய்வு ஏற்பு


மே,06,2017. அந்தியோக்கியாவின் கிரேக்க மெல்கித்திய முதுபெரும் தந்தை 3ம் கிரகரி லஹாம் (Gregory III Laham) அவர்கள், மேய்ப்புப்பணியிலிருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முதுபெரும் தந்தை லஹாம் அவர்களுக்கும், மெல்கித்திய ஆயர்களுக்கும் இச்சனிக்கிழமையன்று கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை, 83 வயது நிரம்பிய முதுபெரும் தந்தை லஹாம் அவர்கள், திருஅவைக்கு ஆற்றிய பணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முதுபெரும் தந்தை லஹாம் அவர்கள், இறைமக்கள் மீது ஆர்வம் கொண்ட ஊழியராக, திருஅவைக்கு மிகத் தாராளமாகப் பணியாற்றினார் எனவும், சிரியாவின் துன்பநிலைகள்மீது, பன்னாட்டு சமுதாயம் கவனம் செலுத்தும்வண்ணம், அக்கறையுடன் செயல்பட்டார் எனவும், அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிரேக்க மெல்கித்திய திருஅவையின், வருங்கால நற்செய்தி சான்று வாழ்வை  ஊக்கப்படுத்தி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், மே 13, வருகிற சனிக்கிழமையன்று, கஜகஸ்தானில் இடம்பெறும், மரியா மாநாட்டின் நிறைவு நிகழ்வில், திருத்தந்தையின் பிரதிநிதியாக, கர்தினால் பால் யோசப் கோர்தெஸ் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். இதற்குரிய அதிகாரப்பூர்வ கடிதத்தை இச்சனிக்கிழமையன்று அனுப்பியுள்ளார் திருத்தந்தை.

அன்னை மரியா பாத்திமாவில் காட்சியளித்ததன் நூறாம் ஆண்டை முன்னிட்டு, கஜகஸ்தானில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. இதன் நிறைவு விழாவில், கோர் ஊனும் திருப்பீட பிறரன்பு அவையின் முன்னாள் தலைவராகிய கர்தினால் கோர்தெஸ் அவர்கள் தலைமையிலான குழு கலந்துகொள்கிறது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.