2017-05-06 15:45:00

உயிர்ப்புக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


மாவீரன் அலெக்சாண்டர் தன் படையுடன் மக்ரான் என்ற பாலை நிலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். அவர் தாகத்தைத் தணிக்க, இரு தளபதிகள், நீண்ட தூரம் நடந்து, தங்கள் கவசத்தில் சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அலெக்சாண்டர் அத்தளபதிகளின் விசுவாசத்தைப் பாராட்டினார். பின்னர், அவர்களிடம், "வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், "இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது" என்று சொன்னார்கள். “வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, எனக்கும் தண்ணீர் தேவையில்லை” என்று கூறியபடி, கவசத்தில் இருந்த நீரை மணலில் ஊற்றினார், அலெக்சாண்டர். சூழ இருந்த வீரர்கள், தாய்மை உள்ளம் கொண்ட தங்கள் தலைவனைப் பெருமையுடன் எண்ணி, ஆர்ப்பரித்தனர்.

ஒரு தலைவனுக்குத் தேவையான பண்புகள் எவை என்ற கேள்வி எழுந்தால், நிரவாகத் திறமை, அறிவுக்கூர்மை, வீரம் என்ற பண்புகளையே முதலில் எண்ணிப் பார்ப்போம். இளகிய, மென்மையான மனம், மக்களுடன் தன்னையே ஒருவராக இணைத்துக்கொள்ளும் ஆர்வம் போன்ற பண்புகளை நாம் எளிதில் எண்ணிப் பார்ப்பதில்லை. மாவீரன் அலெக்சாண்டரைப்பற்றி நாம் பகிர்ந்த இந்த நிகழ்வில், அவரது இளகிய, மென்மையான மனமும், வீரர்களுடன் தன்னையே ஒருவராக இணைத்துக்கொண்ட தியாகமும் தெளிவாகின்றன. உலகத் தலைவர்களிடம் இத்தகையப் பண்புகளை எதிர்பார்க்கக்கூடாது என்று நாமாகவே முடிவு செய்துவிட்டோம். உலகின் அரசியல், மற்றும், நிறுவனத்தலைவர்கள், தலைமைத்துவத்தைப்பற்றி உருவாக்கித் தந்துள்ள தவறான இலக்கணம் இத்தகைய முடிவுக்கு நம்மைத் தள்ளிவிட்டுள்ளது.

அண்மையக் காலங்களில் உருவாகியுள்ள மற்றோர் ஆபத்து என்னவென்றால், உலகத் தலைவர்களிடம் காணப்படும் நிர்வாகத்திறமை, அறிவுக்கூர்மை போன்ற பண்புகளையே ஆன்மீகத் தலைவர்களிடம், மதத் தலைவர்களிடம், திருஅவைத் தலைவர்களிடம் நாம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டோம். தலைவர்களுக்குரிய பண்புகள் என்று மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் பாடங்களை, ஆன்மீகத் தலைவர்களும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற போக்கு அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. ஆபத்தான இந்தப் போக்கிற்கு ஒரு மாற்றாக, ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் எவ்வகைப் பண்புகளை எதிர்பார்க்கவேண்டும் என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

உயிர்ப்புக் காலத்தின் 4ம் ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஞாயிறு, திருத்தந்தை அருளாளர், 6ம் பவுல் அவர்களால், இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள் என்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன், இந்த ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், பத்து தியாக்கோன்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள் பணியாளர்களாகத் திருநிலைப்படுத்துகிறார். நல்லாயன் ஞாயிறு, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் ஞாயிறு, இளையோர் அருள்பொழிவு பெறும் ஞாயிறு என்ற எண்ணங்களை எல்லாம் இணைக்கும்போது, திருஅவையின் இன்றையத் தலைவர்கள், நாளையத் தலைவர்கள் ஆகியோரைப்பற்றி சிந்தித்து, செபிக்க அழகியதொரு தருணத்தை இஞ்ஞாயிறு உருவாக்கித் தருகிறது.

நல்லாயன் என்ற சொல்லைக் கேட்டதும், பரிவான, அமைதியான கிறிஸ்துவின் உருவம் நம் உள்ளங்களில் தோன்றி, இதமான உணர்வுகளைத் தருகிறது. கிறிஸ்தவப் பாரம்பரியத்தில், இயேசுவைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட முதல் உருவம், நல்லாயன் உருவம் என்று சொன்னால் அது மிகையல்ல. கிறிஸ்தவர்கள், உரோமையப் பேரரசால் வேட்டையாடப்பட்ட வேளையில், அவர்கள் உருவாக்கிய நிலத்தடி கல்லறைகளில் கிறிஸ்து நல்லாயனாக வரையப்பட்டுள்ளார். 3ம் நூற்றாண்டையொட்டி உருவாக்கப்பட்ட இந்த கல்லறைகளில், அடிக்கடி தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்களுக்கு, ஆறுதலும், நம்பிக்கையும் தந்த உருவமாக, நல்லாயன் இயேசு இருந்தார். ஆனால், இந்த உருவகத்தை இயேசு பயன்படுத்தியபோது, அது இஸ்ரயேல் மக்கள் நடுவே ஒரு புரட்சியை உருவாக்கியது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

இஸ்ரயேல் மக்களின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், மோசே, தாவீது போன்ற மாபெரும் தலைவர்கள், ஆடுகளைப் பேணிக்காத்தவர்கள் என்பதை அறியலாம். இவர்களில், மோசேயைப் பற்றி கூறப்படும் ஒரு பாரம்பரியக் கதை நினைவுக்கு வருகிறது.

மோசே தன் மாமனார் இத்திரோவின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு குட்டி ஆடு மந்தையிலிருந்த காணாமற்ப் போனது. அந்த ஆட்டைத் தேடி, மோசே, பல மணி நேரம், அலைந்து திரிந்தார். இறுதியில், அந்த ஆட்டுக் குட்டியைக் கண்டபோது, அது, ஓர் ஆழமான பாறை இடுக்கில் நுழைந்து, அங்கிருந்த ஒரு நீர்ச்சுனையில் தண்ணீர் பருகிக்கொண்டிருந்ததை மோசே கண்டார். "ஓ, உன் தேவை இந்த நீர்தானா? இது தெரிந்திருந்தால், நானே உன்னை நீர்நிலைக்கு அழைத்துச் சென்றிருப்பேனே! சரி, இப்போது நீ மிகவும் களைத்திருப்பாய். வா, உன்னை நான் தூக்கிச் செல்கிறேன்" என்று கூறி, அந்த ஆட்டை, தோளில் சுமந்த வண்ணம் தன் மந்தை நோக்கித் திரும்பினார் மோசே. அவர் திரும்பி வரும் வழியில், கடவுள் அவரிடம், "உனக்குச் சொந்தமில்லாத ஒரு மந்தையின் ஆடு தவறியபோதே நீ இவ்வளவு அக்கறையுடன் அதைத் தேடிச் சென்றாயே! எனவே, உன்னை நம்பி என் மக்களை நான் ஒப்படைக்கிறேன். அவர்களை நீ எகிப்திலிருந்து அழைத்து வரவேண்டும்" என்று கூறியதாக இந்தப் பாரம்பரியக் கதை சொல்கிறது.

தங்கள் தலைவர்கள், ஆயர்களாக இருந்தனர் என்பதில் பெருமை கொண்ட இஸ்ரயேல் மக்கள், அந்தப் பெருமையின் அடிப்படையில், தங்கள் இறைவனையும் ஓர் ஆயராக ஒப்புமைப்படுத்திப் பேசினர். இஸ்ரயேல் மக்களின் மனதில் மிக ஆழமாக இடம்பெற்றிருந்த 'ஆண்டவரே என் ஆயர்' என்ற 23ம் திருப்பாடல், இன்றும், கிறிஸ்தவர்களுக்கு, பல வழிகளில், ஆறுதல்தரும் அற்புதத் திருப்பாடலாக விளங்குகிறது.

இஸ்ரயேல் சமுதாயத்தில் இத்துணை உயர்ந்த மதிப்பு பெற்றிருந்த ஆயர்கள், அல்லது இடையர்கள், படிப்படியாக தங்கள் மதிப்பை இழந்து, இயேசுவின் காலத்தில் மிக, மிகத் தாழ்வானவர்களாகக் கருதப்பட்டனர். தங்கள் ஆடுகளோடு, அவர்கள், இரவும், பகலும் வாழ்ந்ததால், தூய்மையற்றவர்களாக, நாற்றமெடுத்தவர்களாக கருதப்பட்டனர். பசும்புல் தரையைத் தேடி, ஆடுகளை வழிநடத்திச் சென்றதால், ஊருக்குள் தங்குவது, தொழுகைக்கூடங்களுக்குச் செல்வது போன்ற நற்செயல்களை, அவர்களால் செய்ய இயலவில்லை. மோசே நிறுவிய ஒய்வு நாள், புனித நாள் கடமைகளை கடைபிடிக்க முடியவில்லை. அவர்களது நன்னெறி வாழ்வின் மீதும், பல பழிகள் சுமத்தப்பட்டன. எனவே, அவர்கள் இஸ்ரயேல் சமுதாயத்தில் மிகத் தாழ்ந்தவர்களெனக் கருதப்பட்டனர்.

அழுக்கானவர்கள், நாற்றமெடுத்தவர்கள், கடமை தவறியவர்கள், நன்னெறியற்றவர்கள் என்று அடுக்கடுக்காக அவர்கள் மீது குத்தப்பட்ட முத்திரைகள், ஆயர்களை, இஸ்ரயேல் சமுதாயத்தின் ஓரத்திற்குத் தள்ளிவிட்டன. எவ்வளவு தூரம் அவர்கள் ஒதுக்கப்பட்டனர் என்பதை, லூக்கா நற்செய்தியில், இயேசு பிறப்பு நிகழ்வின்போது, நாம் புரிந்துகொள்ளலாம்.

இஸ்ரயேல் சமுதாயத்தின் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது என்று லூக்கா நற்செய்தியில் (லூக்கா 2:1-5) வாசிக்கிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்பில், தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய, அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்ற வேளையில், இடையர்கள், ஊருக்கு வெளியே, வயல்வெளியில் தங்கியிருந்தனர் (லூக்கா 2:8) என்பதையும் நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிடுகிறார். மக்கள் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படாத இடையர்கள், ஆடுகளோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். இறைமகன் இயேசுவுக்கும் இதே நிலைதான். அவர் பிறந்தபோது, மக்கள் தங்கியிருந்த இல்லங்களிலோ, சத்திரத்திலோ இடம் இல்லாததால், மிருகங்கள் தங்கியிருந்த தொழுவத்தில் அவர் பிறக்க வேண்டியிருந்தது.

இஸ்ரயேல் குலங்களிலிருந்து, ஏன், சொல்லப்போனால், மக்கள் சமுதாயத்திலிருந்தே ஒதுக்கி வைக்கப்பட்ட இடையர்களைத் தேடி, இறைவனின் தூதர்கள் சென்றனர் (லூக்கா 2:9) என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிடுவது, ஒரு புரட்சியின் துவக்கமாக உள்ளது. மனிதரோடு இறைவன் என்ற பொருள்படும் 'இம்மானுவேலாக' தான் வந்துள்ளேன் என்ற உண்மையைச் சொல்வதற்கு, குழந்தை இயேசு, இடையர்களைத் தேர்ந்ததிலிருந்து, அவர்கள் மீது அவர் கொண்டிருந்த பெரும் மதிப்பு வெளிப்படுகிறது.

முப்பது ஆண்டுகளுக்குப் பின், இயேசு, தன் பணிவாழ்வில், இதே மதிப்பை ஆயர்களுக்கு மீண்டும் அளித்தார். அவர், தன்னை, பல வழிகளில் உருவகப்படுத்திப் பேசியுள்ளார். வழி, ஒளி, வாழ்வு, திராட்சைச் செடி, வாழ்வின் நீர், உயிர் தரும் உணவு என்று அவர் அறிமுகப்படுத்திய உருவகங்களை இஸ்ரயேல் மக்கள் எளிதில் ஏற்றுக்கொண்டிருப்பர். ஆனால், "நல்ல ஆயன் நானே' (யோவான் 10:11) என்று அவர் கூறியது, இஸ்ரயேல் மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கும். இன்றைய நற்செய்தியில் அத்தகைய ஓர் அதிர்ச்சியை இயேசு வழங்குகிறார். தன்னை ஒரு நல்ல ஆயனாக அடையாளப்படுத்தியது மட்டுமல்லாமல், ஆடுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் திருடர், கொள்ளையர், கூலிக்கு மேய்ப்பவர் இவர்களைப் பற்றியும் இயேசு பேசினார். உண்மையான ஆயனின் குணங்களாக இயேசு கூறும் பண்புகளில் ஒன்றை சிறிது ஆழமாகச் சிந்திப்போம்:

யோவான் 10: 3-4

அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின், அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும்.

நூற்றுக்கணக்காய் ஆடுகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றுக்கும் பாசமாய் பெயரிட்டு அழைப்பது, ஆயனின் முக்கிய குணங்களில் ஒன்று. ஒவ்வொரு மனிதருக்கும் மிக நெருக்கமான, உயர்ந்த அடையாளம், அவரது பெயர்... ஒருவரைப் பெயரிட்டு அழைக்கும்போது உருவாகும் உறவு, பிணைப்பு, உணர்ந்துபார்க்க வேண்டிய உண்மை. ஆனால், நாம் வாழும் காலத்தில், பெயர்கள் என்ற அடையாளத்தைக் காட்டிலும், எண்ணிக்கை என்ற அடையாளத்திற்குத் தரப்பட்டுள்ள மதிப்பை நாம் அனைவரும் அறிவோம். நமது வாழ்வை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் என்று பல அடையாள அட்டைகளாக மாற்றி, ஒவ்வொன்றுக்கும் ஓர் எண்ணைக் கொடுத்து நமது முக்கியமான அடையாளங்கள் எண்களில் சிக்கியுள்ளதை நாம் அனைவரும் உணர்ந்து வருகிறோம். முதல் தர நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளில், ஒருவரது வாழ்வே, அட்டைகளிலும், அவற்றில் உள்ள எண்களிலும் புதைந்து வருவதைப் பார்க்கலாம். இந்த அட்டைகள் தொலைந்துவிட்டால், அவரது எண்களை அவர் மறந்துவிட்டால், ஒருவர் தன் சுய அடையாளத்தையே இழக்கும் ஆபத்து உண்டு.

ஆடுகளிடம், ஆயர்களிடம் திரும்பி வருவோம்... மக்களின் மேய்ப்பர்களாக இருக்கும் ஆயர்களும், அருள்பணியாளர்களும் ஆடுகளின் பெயர்களை அறிந்திருப்பதோடு, ஆடுகளின் நறுமணத்தை உணர்ந்திருக்கவேண்டும் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுக்கும்  விண்ணப்பம்.

2013ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட இரு வாரங்களில், புனித வியாழனன்று, அருள்பணியாளர்களுடன் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றிய வேளையில், திருத்தந்தை வழங்கிய விண்ணப்பம் இது. ஆடுகளின் நறுமணத்தை மேய்ப்பர்கள் உணரவேண்டும் என்ற இதே விண்ணப்பத்தை, 'நற்செய்தியின் மகிழ்வு' என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட திருத்தூது அறிவுரை மடலிலும் அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்.

ஆயனின் குரல் கேட்டு ஆடுகள் பின்தொடர்வதுபோல், ஆடுகளின் நறுமணம் ஆயனை ஆடுகளுடன் இணைக்கவேண்டும். அத்தகைய ஆழ்ந்த உறவை வளர்க்கும் ஆயர்களாக, திருஅவைத் தலைவர்களும் பணியாளர்களும் வாழ்வதற்கு, நல்லாயனிடம் உருக்கமாக செபிப்போம்.

ஏப்ரல், மே மாதங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நேரம். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை தூய ஆவியார் வழிநடத்தவேண்டும் என்று மன்றாடுவோம். சிறப்பாக, இறை அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை, இறைவன் வழிநடத்த வேண்டுமென்று, நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.