2017-05-06 15:58:00

உண்மையின் முகத்தை காண குருத்துவ மாணவருக்கு அழைப்பு


மே,06,2017. புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகப் பாதையில் பயிற்சியளிப்பது என்பது, ஆண்டவர் இயேசுவோடு ஆள்-ஆள் உறவு கொள்வதை மையப்படுத்தி, ஒருவரின் ஒருங்கிணைந்த நல்லிணக்க வாழ்வை வளர்ப்பதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் இத்தாலிய குருத்துவ கல்லூரி மாணவர்களிடம் கூறினார்.

இத்தாலியின் Posillipo பாப்பிறை குருத்துவப் பயிற்சி கல்லூரியின் 120 பேரை, இச்சனிக்கிழமை காலையில், வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்துப் பேசிய திருத்தந்தை, இப்பாப்பிறை பயிற்சி கல்லூரி, 1912ம் ஆண்டில், புனித திருத்தந்தை பத்தாம் பத்திநாதரின் விருப்பத்தின்பேரில் ஆரம்பிக்கப்பட்டு, அதை நிர்வகிக்கும் பணி இயேசு சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

இயேசு சபையை தோற்றுவித்த புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீக மரபில், வருங்கால அருள்பணியாளர்களை உருவாக்கும் பொறுப்பிலுள்ள, இக்கல்லூரியின்  பயிற்சியாளர்களுக்கு மூன்று முக்கிய கருத்துக்களைக் கோடிட்டுக் காட்ட விரும்புவதாகத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகப் பாதையில் பயிற்சியளிப்பது என்பது, ஒருவரின் ஒருங்கிணைந்த நல்லிணக்க வாழ்வை இயேசுவோடு உள்ள உறவில் வளர்ப்பது, குருத்துவ வாழ்வை தேர்ந்து தெளிவது, ஆண்டவருக்கும், மக்களுக்கும், மேலும் அதிகமாகத் தன்னையே கையளிப்பதில், இறையாட்சியின் கூறுகளுக்குத் திறந்த உள்ளம் கொண்டிருப்பது என, மூன்று கருத்துக்கள் பற்றி விரிவாகப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டவரோடு உள்ள உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவேளை, இறையழைப்புப் பயணம் முழுவதும், தூய பேதுரு மற்றும், முதல் சீடர்கள் போன்று, ஆண்டவரோடு அன்பு மற்றும், நட்பும் கொண்ட உரையாடலாக இருக்க வேண்டும் எனவும் கூறினார் திருத்தந்தை.

அருள்பணியாளரின் திருப்பணியைச் சுட்டிக்காட்டும் அழைப்பு, புதிய பெயரையும் உள்ளடக்கியுள்ளது எனவும், எதனையும் பெயர் சொல்லி அழைத்தல், தன்னறிவுக்கு முதல் படி எனவும், இதன் வழியாக, நம் வாழ்வில் இறை விருப்பத்தை அறிந்துகொள்கிறோம் எனவும் கூறினார் திருத்தந்தை.

பொருள்களைப் பெயர் சொல்லி அழைக்கவும், வாழ்வில் உண்மையின் முகத்தை நோக்கவும், பிறருக்கு, குறிப்பாக, பயிற்சியாளர்களிடம் ஒளிவு மறைவின்றி உண்மையாய் இருக்கவும், உலகப்போக்குச் சோதனையிலிருந்து விலகி வாழவும் குருத்துவ மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.