2017-05-06 16:52:00

இத்தாலிய அமைதியின் பள்ளிகள் சிறாருடன் திருத்தந்தை


மே,06,2017. பள்ளிக்கும், குடும்பத்திற்கும் இடையிலும், அதேபோல், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் இடையிலும் முறிந்துபோன உடன்பாட்டை மீண்டும் நாம் ஏற்படுத்த வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியப் பள்ளிச் சிறாரிடம் கூறினார்.

பள்ளிச் சிறார் மத்தியில், அமைதி, குடியுரிமை மற்றும் மனித உரிமைகளை  ஊக்குவிக்கும் நோக்கத்தில், "அமைதியின் பள்ளிகள்" என்ற தலைப்பில், உரோம் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட ஏழாயிரம் சிறாரை, திருப்பீடத்தின் Nervi அரங்கத்தில் இச்சனிக்கிழமை நண்பகலில் சந்தித்தத் திருத்தந்தை, அச்சிறார் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார். கேள்வி-பதில் முறையில் அமைந்த இச்சந்திப்பில், இத்தாலிய கல்வி அமைச்சர் Valeria Fedeli அவர்களும் கலந்துகொண்டார்.

பள்ளி, குடும்பம், சமுதாயம் இவற்றுக்கு இடையே உடன்பாட்டை உருவாக்க வேண்டும், ஒவ்வொருவரும், சிறுவர் சிறுமியரின் வாழ்வில் அக்கறை காட்டும்போது அவர்கள், வளர்வார்கள் என்று கூறியத் திருத்தந்தை இங்கு அமர்ந்திருக்கும் கல்வி அமைச்சர் இதற்கு முயற்சி எடுப்பார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

ஒரு வெடிகுண்டின் பெயர், “அனைத்து வெடிகுண்டுகளின் அன்னை” எனக் கேள்விப்பட்டபோது, நான் வெட்கமடைந்தேன், இவ்வெடிகுண்டு ஆப்கானிஸ்தானில் போடப்பட்டது என்றும் அறிந்தேன், பொதுவாக, அன்னை, வாழ்வைக் கொடுப்பவர், ஆனால், இது மரணத்தைக் கொணர்கின்றது என்றும் திருத்தந்தை சிறாரிடம் தெரிவித்தார்

அனைத்து வெடிகுண்டுகளின் அன்னை, கலாச்சார அழிவாக அமைந்துள்ளது என்று சொல்லி, அதற்கெதிரான தனது கண்டனத்தை தெரிவித்த திருத்தந்தை, தற்போது மக்கள் புலம்பெயர்தல், இரண்டாம் உலகப் போருக்குப் பின் இடம்பெறும் மிகப்பெரும் துன்பயியலாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் என்றார்.

இந்த உலகில் போர் இடம்பெற்று வருகின்றது, ஒவ்வொரு நாளும் நடக்கும் கொடுமைகளை தொலைகாட்சியில் பார்க்கின்றோம் என இத்தாலியச் சிறாரிடம் கூறியத் திருத்தந்தை, உலகின் தொடக்கத்தில், காயின், பொறாமையால், தன் சகோதரர் ஆபேலைக் கொன்றான், இதிலிருந்து அழிவு ஆரம்பித்தது என்றும் பகிர்ந்துகொண்டார்.

பள்ளிச் சிறார் மத்தியில், அமைதி, குடியுரிமை மற்றும் மனித உரிமைகளை  ஊக்குவிக்கும் நோக்கத்தில், இத்தாலிய தல அரசுகளின் தேசிய ஒத்துழைப்பு கழகம், உரோம் நகரில் இம்மாநாட்டை நடத்தியது. இது, சிறார் மற்றும், இளையோர் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இம்மாநாட்டில் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.