2017-05-05 16:05:00

ருமேனிய பாப்பிறைக் கல்லூரி உறுப்பினர்களிடம் திருத்தந்தை


மே,05,2017. கடந்தகால நிகழ்வுகளிலே நிலைத்திராமல், அந்நிகழ்வுகளில் விசுவாசத்திற்கு வழங்கப்பட்ட மாபெரும் சான்றுகளை, இக்காலத்திய நற்செய்திப் பணிகளுக்கு எடுத்துக்காட்டாகப் பின்பற்றி வாழுமாறு, அருள்பணியாளர் குழு ஒன்றிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தனது எண்பதாவது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும், உரோம் நகரிலுள்ள, ருமேனிய பாப்பிறைக் கல்லூரியின் தலைவர், ஏனைய உறுப்பினர்கள் என நாற்பது பேரை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, நாத்தீக அடக்குமுறையில், ருமேனியக் கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நினைவுகூர்ந்தார்.

வருங்கால மேய்ப்பர்களை உருவாக்கும் இக்கல்லூரியின் எண்பது ஆண்டு வரலாற்றை நினைவுகூர்ந்த திருத்தந்தை, கடந்த கால நினைவுகளை மனதில் இருத்துமாறும், கடந்த காலத்தில் திருஅவையின் நடவடிக்கைகளை நினைவுகூரும்போது, அது, இக்காலத்திய சோதனைகளைத் தவிர்க்க உதவும் என்றும் கூறினார்.

கிறிஸ்தவ நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுமாறும் அறிவுரை வழங்கிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமையால் வாழ்வு இருளடையும்போது, நல்லவைகளைக் கண்டுணர்ந்து, புதிய கண்ணோட்டத்தில் வாழ்வதற்கு இந்நம்பிக்கை உதவும் என்றும் தெரிவித்தார். இச்சந்திப்பின் இறுதியில், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.