2017-05-05 16:29:00

மே 24ல், திருத்தந்தை, அரசுத்தலைவர் டிரம்ப் சந்திப்பு


மே,05,2017. “உயிர்த்த கிறிஸ்து, ஒவ்வொரு காலத்திலும், அயர்வின்றி நம்மைத் தேடுகிறார், இந்த உலகின் பாலைநிலங்களில் அலைந்துகொண்டிருக்கும், அவரின் சகோதர, சகோதரிகளைத் தேடுகிறார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், இம்மாதம் 24ம் தேதி புதன்கிழமை, காலை 8.30 மணிக்கு, திருப்பீடத்தில் சந்திப்பார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

திருத்தந்தையைச் சந்தித்த பின், திருப்பீடச் செயலர் கர்தினால், பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் காலகர் ஆகிய இருவரையும், அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள் சந்தித்துப் பேசுவார் எனவும், திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.

இதற்கிடையே, எகிப்து திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து உரோம் திரும்பிய விமானப் பயணத்தில், அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள், திருப்பீடத்திற்கு வருகை தருவது குறித்து, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், தன்னைச் சந்திப்பதற்கு விண்ணப்பிக்கும் அரசுகளின் எல்லாத் தலைவர்களையும் தான் சந்திப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், டிரம்ப் அவர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக, இத்திருப்பீட சந்திப்பு அமைந்துள்ளது எனவும், இப்பயணத்தில், இஸ்ரேல் மற்றும், சவுதி அரேபியா நாடுகளுக்கும் டிரம்ப் அவர்கள் செல்வார் எனவும், அமெரிக்க அரசுத்துறை அறிவித்துள்ளது.

Brussels நகரில் இம்மாதம் 25ம் தேதி நடைபெறும் NATO அமைப்பின் கூட்டம், இத்தாலியின் சிசிலித் தீவின் Taorminaவில், இம்மாதம் 26, 27 தேதிகளில் நடைபெறும் G7 உச்சி மாநாடு ஆகியவற்றில், டிரம்ப் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். இதையொட்டி அவரின் இந்த வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் இடம்பெறுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.