2017-05-05 16:48:00

பழங்குடியின மக்களின் தாகம் தீர்த்த வாட்ஸ் அப் குழு


மே,05,2017. தகவல் தொழில் நுட்பத்தின் உச்ச நிலையை அடைந்துள்ள வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ் புக் போன்றவற்றை வைத்து, தூக்கம் தொலைத்து, இளைய சமுதாயம் எதையெதையோ செய்து கொண்டிருக்க சிறுவாணி விழுதுகள் என்றொரு வாட்ஸ் அப் குழு தண்ணீரில்லாமல் தவித்துக் கொண்டிருந்த பழங்குடியின கிராமத்திற்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து, அடுத்த கட்டத்தை நோக்கி நுழைந்து கொண்டிருக்கிறது.

சிறுவாணி விழுதுகள் வாட்ஸ் அப் நண்பர்கள் குழு, இரவு நேரத்தில்தான் இயங்குகிறது. 'கல்கொத்தி பழங்குடி கிராமத்தில் ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வருவதில்லை என்பதால், இரவில் அத்தனை பேரும் குழுமியிருப்பது, போர்வெல் பணிகள் செய்வது, மோட்டார் பழுது, பிளம்பருக்கு அழைப்பு, எலக்ட்ரீசியன் வரவழைப்பு எல்லாமே வாட்ஸ் அப்பிலேயே பகிரப்படுகிறது.

இறுதியில், நல்ல உள்ளங்கள் சிலரின் தாராள உதவியுடன், புதிதாக மோட்டார் பம்ப்செட், குழாய்கள் மோட்டார், அனைத்தும் பொருத்தப்பட்டு, இறுதியில் விடியற்காலை ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் பீறிடுகிறது. மகிழ்ச்சி கொண்டாடுகிறது வாட்ஸ் அப் நண்பர்கள் குழு.

இந்த வாட்ஸ் அப் குரூப்பில் வேறு பகிர்வுகள் ஃபார்வேர்டு வரும்போது, உடனே அந்த பெயரை நீக்கச்சொல்லி அட்மினுக்கு உத்தரவு பறக்க, அட்மின், தயவு தாட்சண்யமின்றி அந்த நபரை குழுவிலிருந்து நீக்குகிறார்.

இந்த வாட்ஸ் அப் குழு முழுக்க இங்குள்ள இயற்கை சூழல், மக்கள் நலனுக்காக மட்டுமே பகிரப்படுகிறது. அவையல்லாத விஷயங்கள் கண்டிப்பாக இதில் பகிரக்கூடாது என வாட்ஸ் அப்பிலேயே கட்டளை பிறக்கிறது.

பழங்குடியின கிராமத்திற்கு உதவுவது போலவே ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுத்தல், நீரோடையை ஆக்கிரமித்த நிலச் சுவான்தார்கள் மீது போலீஸில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பது, சாலையோரம் மரம் நடுதல், அதற்கு நாள்தோறும் தண்ணீர் விடுதல் என சகல சேவைகளையும் வாட்ஸ் அப் உதவியுடனே செய்து கொண்டிருக்கிறது சிறுவாணி விழுதுகள் என்ற வாட்ஸ் அப் நண்பர்கள் குழு.

ஆதாரம்:  தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.