2017-05-04 16:43:00

திருப்பீடத்தின் தொடர்புத் துறையை பாராட்டிய திருத்தந்தை


மே 04,2017. திருப்பீடத்தின் தொடர்புத் துறை, இரக்கத்தின் நற்செய்தியை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்வதற்கு, புதிய வழிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை தான் பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய ஓர் உரையில் குறிப்பிட்டார்.

புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பீடத் தொடர்புத் துறை, தன் முதல் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை நடத்தும் வேளையில், அக்கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களை, இவ்வியாழன் காலை சந்தித்த திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

திருப்பீடத்தில் தனித்தனியே இயங்கி வந்த வானொலி, தொலைகாட்சி, செய்தித்தாள், வலைத்தளம் என்ற அனைத்து தொடர்புத்துறை பிரிவுகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள திருப்பீடத் தொடர்புத் துறை, வருகிற ஜூன் மாதம் தன் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்யும் என்பதையும் திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

தனித்தனியே உருவாக்கப்பட்டு, பல ஆண்டுகளாக இயங்கிவந்த தொடர்பு சாதன பிரிவுகள், செறிவு நிறைந்த வரலாற்றைக் கொண்டுள்ளன என்பதை சிறப்பாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, தற்போதைய தொடர்பு உலகத்தின் டிஜிட்டல் புரட்சிகள், ஒருங்கிணைப்பை அவசியமாக்குகின்றன என்பதை எடுத்துரைத்தார்.

வரலாற்றைப் பாதுகாப்பதும், புதிய வழிகளில் பயணிப்பதும் திருப்பீடத் தொடர்புத் துறை சந்திக்கவேண்டிய சவால் என்பதையும் திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.