2017-05-04 17:01:00

திருத்தந்தையால் திருப்பொழிவு பெறும் பத்து தியாக்கோன்கள்


மே 04,2017. மே 7, வருகிற ஞாயிறு, கொண்டாடப்படும் நல்லாயன் ஞாயிறையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பத்து தியாக்கோன்களை, அருள்பணியாளர்களாக திருப்பொழிவு செய்வார் என்று, உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

இறையழைத்தலுக்காக செபிக்கும் 54வது உலக நாளெனச் சிறப்பிக்கப்படும் இஞ்ஞாயிறன்று காலை, 9.15 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை தலைமையேற்று நடத்தும் திருப்பலியில், அருள்பணியாளர்களாக திருப்பொழிவு செய்யப்படும் பத்து இளையோரில், ஆறுபேர் உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளின் ஒரு முக்கிய நிகழ்வாக, மே 5, இவ்வெள்ளியன்று மாலை, 8.30 மணிக்கு, புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில், கர்தினால் அகோஸ்தீனோ வல்லினி அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருவிழிப்பு திருவழிபாடு நடைபெறும்.

இந்த வழிபாட்டு நேரத்தில், ஞாயிறன்று அருள்பொழிவு பெறவுள்ள தியாக்கோன்களில் இருவர், தங்கள் வாழ்வுப் பயணத்தைக் குறித்த சாட்சியத்தை வழங்குவர்.

1963ம் ஆண்டு, திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் அவர்கள், உயிர்ப்பு காலத்தின் நான்காம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் நல்லாயன் ஞாயிறை, இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளென அறிமுகம் செய்தார்.

இவ்வாண்டு சிறப்பிக்கப்படும், இறையழைத்தலுக்காக செபிக்கும் 54வது உலக நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தியை, 'பணியாற்ற அனுப்பப்படுவதற்கு, தூய ஆவியாரால் அழைத்துச் செல்லப்படுதல்' என்ற தலைப்பில் வழங்கியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.