2017-05-03 16:21:00

புதன் மறைக்கல்வியுரை : எகிப்து திருத்தூதுப் பயணம்


மே,03,2017. இப்புதன் காலை பத்து மணியளவில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகள் மத்தியில் திறந்த காரில் வலம் வந்து, குழந்தைகளை முத்தமிட்டு, வாழ்த்தி மேடைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில், மத்தேயு நற்செய்தி இரண்டாம் பிரிவிலிருந்து இந்தப் பகுதி பல மொழிகளில் வாசிக்கப்பட்டது. அக்காலத்தில், ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்”என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது(மத்.2:13-15). அதன்பிறகு, ஏப்ரல் 28, 29, அதாவது கடந்த வெள்ளி, சனி தினங்களில் தான் மேற்கொண்ட எகிப்து நாட்டுத் திருத்தூதுப் பயணம் பற்றிய பசுமையான நினைவுகளை, பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்து, இப்புதன் பொது மறைக்கல்வியுரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புச் சகோதர சகோதரிகளே! இறைவனின் உதவியால் எகிப்தில், இப்பயண நிகழ்வுகளை நிறைவு செய்தேன். அண்மையில் நான் மேற்கொண்ட எகிப்து திருத்தூதுப் பயணம், எகிப்து குடியரசின் அரசுத்தலைவர், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, அல் அசாரின் இஸ்லாம் மதத் தலைவர், காப்டிக் கத்தோலிக்க முதுபெரும் தந்தை ஆகியோரின் அழைப்பின்பேரில் நடைபெற்றது. இந்தப் பயணத்திற்குத் திட்டமிடல், அதனை நிர்வகித்து நடத்தல் என, எல்லாவற்றிக்கும் உதவிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல. இஸ்லாம் மதத் தலைவருடன் நடத்திய சந்திப்பு, பன்னாட்டு அமைதிக் கருத்தரங்கில் நான் வழங்கிய செய்தி ஆகியவை, அமைதி, கல்வியின் கனி என்பதையும், இது, இவ்வுலகில் நம் இருப்பின் சமயக்கூறை மதிக்கும் ஞானத்திற்கும், மனிதப் பண்பிற்கும் நம்மை இட்டுச் செல்கின்றது என்பதையும் நினைவுபடுத்தியது. இறைவனுடன் நாம் மேற்கொள்ளும் உடன்படிக்கை, இறையன்பு மற்றும், அயலவர் அன்பு என்ற கட்டளையில் வேரூன்றப்பட்டுள்ளது. இது, நீதியும், அமைதியும் நிறைந்த பொது மக்கள் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு, நம் முயற்சிகளுக்குத் தூண்டுதலாக அமைகின்றது. இம்முயற்சியில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது. எகிப்தின் மாபெரும் கலாச்சார மற்றும், சமயப் பாரம்பரியம், அமைதியை ஏற்படுத்தும் இப்பணியில் ஒரு சிறப்புப் பங்கை அந்நாட்டிற்கு அளிக்கின்றது. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, திருத்தந்தை 2ம் தவாத்ரோஸ் அவர்களுடன் நான் நடத்திய சந்திப்பில், ஒன்றிப்புக்காக, உழைப்பதற்கு எங்கள் அர்ப்பணத்தை மீண்டும் உறுதி செய்தோம். அண்மைத் தாக்குதல்களில் பலியானவர்களுக்காக நாங்கள் இருவரும் இணைந்து செபித்தோம். எகிப்து கத்தோலிக்க சமூகத்திற்கு நிறைவேற்றிய திருப்பலியிலும், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், குருத்துவ மாணவர்களுடன் நடத்திய சந்திப்பிலும், எகிப்தில் திருஅவையின் அழகைப் பார்த்தேன். நற்செய்தியில் கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுமாறு, அவர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தினேன். முன்னொரு காலத்தில், எகிப்தில் தஞ்சம் புகுந்த திருக்குடும்பம், எகிப்து மக்களை, வளமையிலும், உடன்பிறந்த உணர்விலும், அமைதியிலும் பாதுகாத்து ஆசீர்வதிப்பதாக.

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலிருந்து இதில் கலந்துகொண்ட திருப்பயணிகளை வாழ்த்தினார் திருத்தந்தை. திருத்தூதர்களாகிய புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு விழாவை இன்று நினைவுகூர்கின்றோம். உயிர்த்த கிறிஸ்துவை மகிழ்வோடு அறிவித்த இவர்கள், நம்மில் விசுவாசத்தை வளர்ப்பார்களாக, நற்செய்திக்கு சான்று நம்மை பகர ஊக்குவிப்பார்களாக. அன்னை மரியின் வணக்க மாதமான மே மாதத்தில், எளிமையான, அதே வேளையில் சக்திமிகுந்த செபமாலையை செபிக்கும்படி இளையோரிடம் சிறப்பு வேண்டுகோளை முன் வைத்தார். பின், அனைத்துப் பயணிகள் மற்றும், அவர்களின் குடும்பங்களின் மீது, நம் தந்தையாம் இறைவனின் அன்பிரக்கம் பொழியப்பட செபித்து, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.