2017-05-03 16:12:00

பாசமுள்ள பார்வையில்... தியாகத் தாய், வீரத் தாய்


மாக்ஸ் (Max) எலிசபெத் ஜாய்ஸ் (Elizabeth Joice), இவ்விருவரும் மகிழ்வாக குடும்பம் நடத்தி வந்தனர். ஆயினும், இவர்கள் மகிழ்வில் அந்தச் செய்தி இடியென விழுந்தது. 2010ம் ஆண்டில், எலிசபெத்தை புற்றுநோய் தாக்கியது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து, ஹீமோ சிகிச்சையும் எடுத்துக் கொண்டார் எலிசபெத். இந்நிலையில் இத்தம்பதியர், தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டு எனவும் விரும்பினர். ஆனால் எலிசபெத் கருவுறுதலுக்கு வாய்ப்புகள் குறைவு என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இருந்தபோதிலும், எலிசபெத் கருத்தரித்தார். 2013ம் ஆண்டு கோடையில் குழந்தை பிறக்கும் என்பதை அத்தம்பதியர் அறிந்தனர். ஆனால், இந்த நற்செய்தியை அறிந்த ஒரு மாதம் சென்று, எலிசபெத் மீண்டும் புற்றுநோயால் தாக்கப்பட்டிருப்பதை அறிந்தார். மூன்றாண்டுகளுக்கு முன் அவரைத் தாக்கியிருந்த அந்நோய், மீண்டும் அவர் உடலில் பரவத் தொடங்கியது. கருவில் வளரும் குழந்தையை கருக்கலைப்பு செய்துவிட்டு, உடனடியாக நோய்க்குச் சிகிச்சையைத் தொடங்க வேண்டும், அல்லது, குழந்தையைப் பாதுகாக்க விரும்பினால் அவசர மருத்துவ சிகிச்சையைத் தாமதிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். தனது வாழ்வா, குழந்தையின் வாழ்வா, இவை இரண்டுக்கும் இடையில் எலிசபெத்! இறுதியில், கருவில் வளரும் குழந்தையைப் பாதுகாப்பதற்காக, சிகிச்சையைத் தள்ளிப்போட்டார் எலிசபெத். 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிறக்கவேண்டிய குழந்தையை, அறுவை சிகிச்சை செய்து சனவரியில் பிறக்க வைத்துவிட்டனர் மருத்துவர்கள். தனக்குப் பிறந்த அழகான பெண் குழந்தைக்கு, லில்லி எனப் பெயர் சூட்டிக் கொஞ்சினார் எலிசபெத். அதே ஆண்டு மார்ச் 9ம் தேதி, 37 வயதை எட்டுவதற்கு ஒரு வாரம் இருந்தபோது இறையடி சேர்ந்தார் எலிசபெத்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.