2017-05-03 16:35:00

சமுதாயப் பங்கேற்பு என் மனதுக்கு நெருக்கமான கருத்து


மே 03,2017. சமுதாயப் பங்கேற்பு என்பது தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு கருத்து என்றும், அக்கருத்தை தங்கள் ஆண்டு கூட்டத்திற்குத் தேர்ந்தெடுத்த பாப்பிறை சமுதாயவியல் கழகத்தை தான் பாராட்டுவதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இக்கழகத்திற்கு அனுப்பியச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 28, கடந்த வெள்ளி முதல், மே 2, இச்செவ்வாய் முடிய, உரோம் நகரில், பாப்பிறை சமுதாயவியல் கழகம் நடத்திய ஆண்டு நிறையமர்வு கூட்டத்திற்கு, திருத்தந்தை அனுப்பியிருந்த செய்தியில் இவ்வாறு கூறியிருந்தார்.

‘பங்கேற்பு நிறைந்த சமுதாயம் நோக்கி’ என்ற கருத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, நீதியை மையப்படுத்தி, திருத்தந்தை வழங்கிய செய்தியில், மூன்று கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

உலகின் வளங்களைப் பகிர்வதால் மட்டும் நீதி நிறைவுபெறுவதில்லை, மாறாக, அந்த வளங்களை உருவாக்குதல், அவற்றை பயன்படுத்துதல் என்ற ஆரம்ப நிலையிலிருந்தே நீதி பின்பற்றப்படவேண்டும் என்பதை, தன் முதல் கருத்தாக, திருத்தந்தை, இச்செய்தியில் பதிவு செய்துள்ளார்.

ஒருங்கிணைந்த, முழு மனித முன்னேற்றத்தை தன் இரண்டாவது கருத்தாகப் பகிர்ந்த திருத்தந்தை, இத்தகைய முன்னேற்றம், மனித மாண்பையும், விடுதலையையும் அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மனிதர்களின் தன்னலத்தை பெருமளவில் வலியுறுத்தும் கருத்துக்கள், பள்ளிகள், கல்லூரிகளில் பாடங்களாகப் பயிற்றுவிக்கப்படுவதன் ஆபத்தை, திருத்தந்தை, தன் மூன்றாவது கருத்தாக, இச்செய்தியில் பகிர்ந்துகொண்டார்.

பாப்பிறை சமுதாயவியல் கழகத்தின் தலைவர் மார்கரெட் ஆர்ச்சர் (Margaret S. Archer) அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியிருந்த இச்செய்தி, வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவில் அண்மையில் வெளியிடப்பட்டது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.