2017-04-28 17:14:00

திருத்தந்தை பிரான்சிஸ் ஓர் இறைவாக்கினராக செயலாற்றுகிறார்


ஏப்.28,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எகிப்தில் மேற்கொண்டுள்ள திருத்தூதுப் பயணம், அடிப்படைவாத போக்கிற்கு எதிராக, அனைத்து மதத்தினரையும், குறிப்பாக, ஷியா, சுன்னி பிரிவுகளைச் சேர்ந்த இஸ்லாமியர், மற்றும் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாக அமையும் என்று, கல்தேய வழிபாட்டு முதுபெரும் தந்தை முதலாம் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறினார்.

கெய்ரோ நகரில் இயங்கிவரும் அல் அசார் பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பன்னாட்டு அமைதி கருத்தரங்கில், திருத்தந்தையோடு சேர்ந்து உரையாற்ற அழைப்பு பெற்றுள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், Sir என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

அமைதியை வளர்ப்பதில், மதங்களுக்கு மிகப்பெரும் பங்கு உள்ளதென்றும், மதங்களையும் அரசியலையும் இணைத்து மக்களைக் குழப்புவது நிறுத்தப்படவேண்டும் என்றும், முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் இப்பேட்டியில்  குறிப்பிட்டார்.

மதங்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகளை பெரிதுபடுத்தாமல், ஒவ்வொரு மதத்திற்கும் உரிய மரியாதையை வழங்கி, திறந்த மனதுடன் உரையாடல்களில் பங்கேற்பதன் வழியாக, அடிப்படைவாதத்தை நாம் வெல்ல முடியும் என்று முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்திக் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மனதில் எழும் எண்ணங்களை, மக்களுடன் எளிய முறையில் பகிர்வதால், மக்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் கொணரும் ஓர் இறைவாக்கினராக செயலாற்றுகிறார் என்று, முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.