2017-04-27 15:19:00

கத்தோலிக்க நடவடிக்கை கழகத்தினருக்கு திருத்தந்தையின் உரை


ஏப்.27,2017. உலகில் வெவ்வேறு பொறுப்புக்களை ஏற்கும் வண்ணம், பொதுநிலையினரை உருவாக்குவதே, கத்தோலிக்க நடவடிக்கை என்றழைக்கப்படும் Catholic Action கழகத்தின் முக்கிய பணி, என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த Catholic Action உலக அவை உறுப்பினர்களிடம் கூறினார்.

கத்தோலிக்க நடவடிக்கை கழகத்தின் உலக அவை கூட்டத்தில் கலந்துகொள்ள உரோம் நகருக்கு வருகை தந்துள்ள 300க்கும் அதிகமான பன்னாட்டு பிரதிநிதிகளை, இவ்வியாழன் காலை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, இவ்வமைப்பினர், 'நற்செய்தியின் மகிழ்வு' என்ற மடலை தங்கள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்தமைக்கு தன் நன்றியைத் தெரிவித்தார்.

செபம், உருவாக்குதல், தியாகம், திருத்தூதுப்பணி என்ற நான்கு தூண்களை அடைப்படையாகக் கொண்டு கத்தோலிக்க நடவடிக்கை கழகம் செயலாற்றுகிறது என்பதை, தன் உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, அந்த நான்கு தூண்களைப் பற்றிய தன் கருத்துக்களை வழங்கினார்.

தலத்திருஅவையில் பொறுப்பான முறையில் பணியாற்ற, தகுந்த வளர்ச்சிபெற்ற பொதுநிலையினரை உருவாக்குவது, கத்தோலிக்க நடவடிக்கை கழகத்தின் முக்கிய பணி என்பதை தன் உரையில் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.

இளையோர், குடும்பத்தினர் என்ற நிலைகளில் வாழும் பொது நிலையினர், மற்றவர்களை உருவாக்க பயன்படுத்தக்கூடிய மிகச் சிறந்த வழி, தங்கள் எடுத்துக்காட்டான வாழ்வே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

அரசியல், பொருளாதாரம், தொழில் என்ற பல்வேறு உலகங்களில் கத்தோலிக்க நடவடிக்கை கழகம் தன் முத்திரையைப் பதிப்பது முக்கியம் என்றாலும், சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோரிடையே ஆற்றும் பணியில் தன் முத்திரையைப் பதிப்பது மிக முக்கியம் என்று, திருத்தந்தை தன் உரையில் வேண்டுகோள் விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.