2017-04-27 15:28:00

இறைவனுக்குக் கீழ்ப்படிவதே, கிறிஸ்தவருக்கு மிக முக்கியம்


ஏப்.27,2017. சமுதாயத்தில் மதிப்புள்ள ஒரு நிலையை அடைவது, ஒரு கிறிஸ்தவருக்கு முக்கியமல்ல, மாறாக, இறைவனுக்குக் கீழ்ப்படிவதே, முக்கியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை நிறைவேற்றிய திருப்பலியில், மறையுரை வழங்கினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், "மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படியவேண்டும்?" என்று திருத்தூதர் பேதுரு எழுப்பும் கேள்வியை தன் மறையுரையின் மையமாக்கினார்.

திருஅவையின் துவக்க காலத்தில், திருத்தூதர்களைச் சுற்றி கூடிய குழுமத்தில், இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்ட மக்கள் இருந்தனர், அதேவேளை, தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொண்ட அனனியா, சப்பிரா போன்றவர்களும் இருந்தனர் என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

தன் பாதுகாப்பிற்காகப் பயந்து, இயேசுவை மறுதலித்த பேதுரு, மதத் தலைவர்கள் முன்னிலையில் நடந்த விசாரணையின்போது, 'மனிதர்களுக்கு கீழ்ப்படிவதைவிட, இறைவனுக்கு கீழ்ப்படிவதே மேல்' என துணிவுடன் கூறுகிறார் என்று, திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இறைவனுக்குக் கீழ்ப்படிவது மேல் என்று கூறிய பேதுருவை கொல்வதற்கு மதத் தலைவர்கள் திட்டமிட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இன்றும், இறைவனுக்குக் கீழ்ப்படிய துணிவோருக்கு இத்தகைய முடிவே நிகழ்கிறது என்று கூறினார்.

இறைவனுக்குக் கீழ்ப்படிய முடிவு செய்துள்ளோரைக் குறித்து, இயேசு மலைப்பொழிவில், "என்பொருட்டு இகழ்ந்து, துன்புறுத்தப்படும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள்" என்று கூறிய சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.