2017-04-26 16:39:00

பிரான்ஸ் நாட்டு தேர்தல் குறித்து அந்நாட்டு ஆயர் பேரவை


ஏப்.26,2017. மனிதர்களின் பொது நலனை, குறிப்பாக, சமுதாயத்தில் மிகவும் நலிந்தோர் மீது கொள்ளும் அக்கறையை முன்னிறுத்தி, பிரான்ஸ் நாட்டில் தேர்தல் நடைபெறவேண்டும் என்று அந்நாட்டு ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் அரசுத்தலைவர் தேர்தலின் முதல் கட்டம் நிறைவுற்று, மேமாதம் 7ம் தேதி, அடுத்த கட்ட வாக்கெடுப்பு நிகழவிருப்பதையொட்டி, ஆயர்கள் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், பொது நலன், உடன்பிறந்த உணர்வு, மனிதர்களின் அடிப்படை மாண்பு, நலிந்தோர் மீது அக்கறை ஆகிய கிறிஸ்தவ விழுமியங்கள் முன்னிறுத்தப்பட்டுள்ளன.

அரசியல் என்பது மக்களின் பொதுநலனைச் சார்ந்த உண்மை என்பதால், அங்கு, மதங்களுக்கும் உரிய பங்கை அளிப்பது நல்ல விளைவுகளை உருவாக்கும் என்று ஆயர்கள் இவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

குடும்ப வாழ்வை குலையாமல் காத்து வந்தால் மட்டுமே, சமுதாய வாழ்வை காக்க முடியும் என்பதை வலியுறுத்தும் ஆயர்கள், கட்டுப்பாடற்ற சுதந்திர உணர்வுகள், சமுதாய வாழ்வை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐரோப்பிய சமுதாயத்தை எதிர்கொண்டுள்ள புலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்கு பிரான்ஸ் நாடும் தன் பங்களிப்பை வழங்கவேண்டும் என்று, ஆயர்களின் அறிக்கை மக்களிடம் நினைவுறுத்தியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.