2017-04-26 16:17:00

TED தொலைக்காட்சி நிகழ்வில் திருத்தந்தை வழங்கிய உரை


ஏப்.26,2017. இவ்வுலகில் நம்பிக்கை வாழ்வதற்கு தனியொருவர் போதும் என்றும், அந்த தனியொருவர் நீங்களாக இருக்கலாம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காணொளிச் செய்தி ஒன்றில் கூறியது, கனடா நாட்டின் வான்கூவர் நகரில், ஏப்ரல் 25, இச்செவ்வாய் மாலை ஒளிபரப்பானது.

தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, வடிவமைப்பு என்ற பொருள்படும், Technology, Entertainment, Design என்ற மூன்று வார்த்தைகளின் சுருக்கமாக TED என்றழைக்கப்படும் ஒரு தொலைக்காட்சி நிகழ்வுக்கு, 'The Future You' என்ற தலைப்பில் திருத்தந்தை வழங்கிய காணொளிச் செய்தியில் அவர் இவ்வாறு கூறினார்.

கனடா நாட்டின் வான்கூவர் நகரில் செவ்வாய் மாலை 6.30 மணிக்கு, அதாவது, உரோம் உள்ளூர் நேரம் வியாழன் அதிகாலை 3.30 மணி நேரம் நேரடி ஒளிபரப்பான இந்த நிகழ்வில், திருத்தந்தை, இத்தாலிய மொழியில் பேசியது, 22 மொழிகளில், மொழிபெயர்க்கப்பட்டது.

'நீ' அல்லது 'நீங்கள்' என்ற சொல்லில், உறவு உள்ளடங்கியுள்ளது என்றும், 'The Future You', அதாவது, 'எதிர்காலத்து நீ' என்ற தலைப்பு, இவ்வுலகின் எதிர்காலம் உறவுகளின் அடிப்படையில் அமையவேண்டும் என்பதையும் நமக்குக் கூறுகிறது என்று, திருத்தந்தை, இவ்வுரையின் துவக்கத்தில் கூறினார்.

ஏறத்தாழ 18 நிமிடங்கள் (17 நிமிடங்கள், 52 நொடிகள்) நீடித்த இந்த உரையில், மூன்று கருத்துக்களையும், இக்கருத்துக்களை விளக்க, நல்ல சமாரியன் உவமையின் விளக்கத்தையும் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.

'அடுத்தவர் யார்' என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விடையாக, இயேசு, நல்ல சமாரியர் உவமையைக் கூறினார் என்பதை நினைவுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அடுத்தவர்' என்பது, வெறும் புள்ளிவிவரம் அல்ல, அவர், முகமும், உணர்வும் கொண்ட மனிதப் பிறவி என்பதை, தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

இத்தாலியிலிருந்து அர்ஜென்டீனாவுக்குப் புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்தில் தான் பிறந்ததை இவ்வுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் அடுத்தவரைச் சார்ந்து வாழவேண்டியுள்ளது, நம்மில் யாரும் தீவு அல்ல என்பதை தன் முதல் கருத்தாகப் பகிர்ந்துகொண்டார்.

நம்மிடம் உள்ள தொழில்நுட்பம், அறிவியல் ஆகியவை, உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் கருவிகளாக இருப்பது எவ்வளவு அழகானது என்பதை, தன் இரண்டாவது கருத்தாக முன்வைத்தத் திருத்தந்தை, TED நிறுவனம், படைப்பாற்றலை ஊக்குவிக்கும் ஒரு நிறுவனம் என்பதை அறிந்து மகிழ்வதாகவும், படைப்பாற்றலும், பிறரன்பும் இணைவது இவ்வுலகை மிக உன்னத நிலைக்குக் கொண்டு சேர்க்கும் என்றும் கூறினார்.

'நீ', 'நான்' என்ற தனிப்பட்டவர்கள் இணைந்தால், அங்கு உருவாகும் 'நாம்' என்ற உணர்வு, இவ்வுலகில், ஒரு புரட்சியை, பரிவை அடைப்படையாகக் கொண்ட ஒரு புரட்சியை உருவாக்க முடியும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மூன்றாவது கருத்தாகப் பகிர்ந்துகொண்டார்.

இவ்வுலகில் சக்தி மிகுந்த பொறுப்புகளில் இருப்போர், பணிவுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதை தெளிவாகவும், உறுதியாகவும் கூறியத் திருத்தந்தை, பணிவில்லாதவர் கரங்களில் சக்தி இருப்பது, அவரையும், இவ்வுலகையும் அழித்துவிடும் என்று எச்சரித்தார்.

'அதிகாரத்தை கொண்டிருப்பது, வெறும் வயிற்றில் மது அருந்துவதைப் போன்றது' என்று, அர்ஜென்டீனாவில் பயன்படுத்தப்படும் ஒரு பழமொழியைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அளவின்றி மது அருந்துவோர், தங்களை மட்டுமல்லாமல், சூழ இருப்போரையும் பாதிப்பதைப் போல், அதிகாரத்தில் இருப்பவர்களும் செயல்படக்கூடும் என்று எடுத்துரைத்தார்.

இவ்வுலகை மாற்றும் சக்தியும், அதிகாரமும், அரசியல்வாதிகள், தலைவர்கள் ஆகியோரிடம் மட்டும் இல்லை, நாம் ஒவ்வொருவரும் இச்சக்தியைப் பெற்றுள்ளோம் என்றும், நாம் மனது வைத்தால், பரிவின் அடிப்படையில் ஒரு புரட்சியைக் கொணர முடியும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், TED அமைப்பினர் வழியே வழங்கிய காணொளிச் செய்தியின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.