2017-04-25 16:54:00

உலக மலேரியா நாள் ஏப்ரல் 25


ஏப்.25,2017. மலேரியா நோய், பொது மக்களின் நலவாழ்வுக்குப் பெரிய அச்சுறுத்தலாகவுள்ளவேளை, அந்நோயைத் தடுப்பதற்கு, முயற்சிகள் தீவிரமாக்கப்பட வேண்டுமென்று, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

ஏப்ரல் 25, இச்செவ்வாயன்று உலக மலேரியா நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, மலேரியா தடுப்புப் பணிகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, WHO நிறுவனம், 2015ம் ஆண்டில், ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வீதம் மலேரியாவால் இறந்தனர் என எச்சரித்துள்ளது.

உலகில் மலேரியாவால் பாதிக்கப்படுபவரில் 90 விழுக்காடு, ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் இடம்பெறுகின்றது எனவும், 2001ம் ஆண்டிலிருந்து அப்பகுதியில், 66 கோடியே 30 இலட்சத்துக்கு அதிகமானோர், மலேரியாவால் தாக்கப்பட்டனர் எனவும், WHO நிறுவனம் கூறியுள்ளது.

26 நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கென, உலக நோய் தடுப்பு வாரம், ஆண்டுதோறும், ஏப்ரல் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாரத்தில் ஒரு நாள், உலக மலேரியா நாளும் இடம் பெறுகின்றது.   

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.