2017-04-24 15:51:00

திருத்தந்தை - செயல்களில் வெளிப்படுவது கிறிஸ்தவ நம்பிக்கை


ஏப்.24,2017. சமரசம் செய்வதோ, கொள்கைகளை உருவாக்குவதோ நம்பிக்கையின் பணிகள் அல்ல, அது, செயல்களில் வெளிப்படுவது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 24, இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார்.

புனிதவாரம், உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, தற்காலிகமாகத் தடைப்பட்டிருந்த காலைத் திருப்பலிகளை, இத்திங்கள் காலை மீண்டும் துவங்கிய திருத்தந்தையுடன், அவரது ஆலோசகர்களாகப் பணியாற்றும் 9 கர்தினால்கள் கலந்துகொண்டனர்.

புனிதர்கள் பேதுரு, யோவான் ஆகியோர் ஏனைய சீடர்களுடன் பகிர்ந்துகொண்ட சாட்சியங்களையும், யூதத் தலைவர், நிக்கதேம் இயேசுவைச் சந்தித்ததையும் எடுத்துரைக்கும் வாசகங்களை அடிப்படையாகக் கொண்டு, தூய ஆவியார் வழங்கும் விடுதலை உணர்வைக் குறித்து தன் மறையுரையில் விளக்கிக் கூறினார், திருத்தந்தை.

தூய ஆவியார் வழங்கும் வரங்கள், நம்மை, தெளிவானச் செயல்களுக்கு இட்டுச் செல்கின்றன என்பதை, பேதுருவும், யோவானும் தங்கள் அனுபவத்தில் உணர்ந்ததுபோல், நாமும் உணர அழைக்கப்பட்டுள்ளோம் என்று, தன் மறையுரையில் தெளிவுபடுத்தியத் திருத்தந்தை, செயல்வடிவம் பெறும் நம்பிக்கை, நம்மை சாட்சிய மரணத்திற்கும் அழைத்துச் செல்லக்கூடும் என்று எடுத்துரைத்தார்.

வரலாற்றில், 'இயலும்', 'இயலாது' என்ற விவாதங்களில் சிக்கிக்கொண்ட திருஅவை, சில வேளைகளில், நமது நம்பிக்கையை கொள்கையளவில் கடினமாக்கியுள்ளது என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை என்பதையே, இயேசு மனுவுருவெடுத்த மறையுண்மை நமக்கு உணர்த்துகிறது என்று தெளிவுபடுத்தினார்.

இயலாது என்ற நிலையை விடுத்து, தூய ஆவியார் வழங்கும் விடுதலை உணர்வுடன் நாம் நமது நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்க இறைவனிடம் மன்றாடுவோம் என்று திருத்தந்தை தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.

மேலும், "இறைவனின் வார்த்தை நம் உள்ளத்தில் இருந்தால், எந்த சோதனையும் நம்மை இறைவனிடமிருந்து பிரிக்க முடியாது" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 24, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.