2017-04-19 17:06:00

கந்தமாலில், இந்துக்களுடன் இணைந்து உயிர்ப்புப் பெருவிழா


ஏப்.19,2017. ஒடிஸ்ஸா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த ரெய்கியா (Raikia) என்ற ஊரில், 5000த்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களும், இந்துக்களும் இணைந்து, உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடினர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

ரெய்கியாவில் அமைந்துள்ள பிறரன்பு அன்னை மரியா ஆலயத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த முயற்சி, இவ்வாண்டு சிறந்த பலன் அளித்துள்ளது என்று, இவ்வாலயத்தின் அருள்பணியாளர், Prodosh Chandra Nayak அவர்கள் ஆசிய செய்தியிடம் தெரிவித்தார்.

2008ம் ஆண்டு இந்து அடிப்படைவாதக் குழுவினரால் கொடுமையான வன்முறைகளைச் சந்தித்த கந்தமால் பகுதியில், கிறிஸ்தவ இந்து ஒற்றுமையை வளர்க்க அப்பகுதியின் கத்தோலிக்க இளையோர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என்று அருள்பணி நாயக் அவர்கள் கூறினார்.

கிறிஸ்துவின் பாடுகள், உயிர்ப்பு ஆகியவற்றை கூறும் விவிலியப் பகுதிகளை நாடக வடிவில் இளையோர் வழங்கியது, காண்போரின் மனதில் அன்பை, அமைதியை தந்தது என்று, இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஓர் இந்து நண்பர் கூறினார்.

மாலை 6 மணி முதல், 10 மணி முடிய நடைபெற்ற இந்நிகழ்வில், கந்தமால் பகுதியின் பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டு, இறுதியில் அனைவரோடும் உயிர்ப்பு விழா வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டனர் என்று ஆசியா செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.