2017-04-17 16:03:00

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை


ஏப்.,17,2017. சென்னையில் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் ‘ரே ஆஃப் லைட் பவுண்டேஷன்’ (Ray of Light Foundation)  என்ற அறக்கட்டளை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது.

இது தொடர்பாக, ரே ஆஃப் லைட் பவுண்டேஷன் நிறுவனரும், காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் பிரியா ராமச்சந்திரன் கூறியது:

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப் படுகின்றனர். இவர்களில் 80 விழுக்காடு குழந்தைகள் இரத்தப் புற்றுநோய் (Leukemia) பாதிப்புக்கு உள்ளாகின்றனர். புற்றுநோய்களிலேயே, இரத்தத்தில் வரக்கூடிய புற்றுநோயை, 3 ஆண்டு சிகிச்சையில் பூரணமாக குணப்படுத்த முடியும். இதற்கு ரூ.10 இலட்சம் முதல் ரூ.17 இலட்சம் வரை செலவாகும்.

இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முழுமையாக சிகிச்சை அளித்தால், 85 விழுக்காடு குழந்தைகள் குணமடைவார்கள். ஆனால் இந்தியாவில் போதுமான சிகிச்சை கிடைக்காததால், 40 விழுக்காடு குழந்தைகள் மட்டுமே குணமடைகிறார்கள். சிகிச்சைப் பெற பணம் இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ரே ஆஃப் லைட் பவுண்டேஷன் அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளில் நன்கொடையாளர்கள் வழியே திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 124 குழந்தைகளுக்கு சென்னையில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 100 குழந்தைகள் புற்றுநோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

இவ்வாண்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகள், சென்னை உட்பட, தமிழகத்தில் எங்கு இருந்தாலும், சிகிச்சைக்காக, காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனைக்கு வந்தால், எங்களுடைய அமைப்பின் மூலம் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு மருத்துவர் பிரியா இராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.