2017-04-17 15:40:00

90வது பிறந்தநாளைக் கொண்டாடிய முன்னாள் திருத்தந்தை


ஏப்.,17,2017. மிகக் கூர்மையான அறிவுத்திறன், தெளிவான பேச்சுத்திறன், கனிவான இதயம் இவையே, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பண்புகள் என்று, கடந்த 14 ஆண்டுகளாக 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு தனிப்பட்ட செயலாராகப் பணியாற்றிவரும் பேராயர் Georg Gänswein அவர்கள் தொலைக்காட்சி பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

ஏப்ரல் 16ம் தேதி, உயிர்ப்புப் பெருவிழாவன்று, தன் 90வது பிறந்தநாளைக் கொண்டாடிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைக் குறித்து, EWTN ஜெர்மன் பிரிவு தொலைக்காட்சியில் பேட்டியளித்த பேராயர் Gänswein அவர்கள், முன்னாள் திருத்தந்தையின் குணங்கள், தலைமைப்பணியில் அவர் ஆற்றிய முக்கிய தாக்கங்கள் ஆகியவை குறித்து தன் பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

தன் 90வது பிறந்தநாளை, அவர் எவ்விதம் கொண்டாடவிருக்கிறார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பேராயர் Gänswein அவர்கள், ஏப்ரல் 16 உயிர்ப்புத் திருவிழா என்பதால், அந்நாளில், திருவழிபாடுகள் முக்கியத்துவம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன், ஏப்ரல் 17, திங்களன்று தன் பிறந்தநாளை மிக எளிய முறையில் தன் நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாட, முன்னாள் திருத்தந்தை தீர்மானித்துள்ளார் என்று கூறினார்.

திருத்தந்தை தன் தலைமைப் பொறுப்பைத் துறந்ததுபற்றிய கேள்விக்குப் பதில் கூறுகையில், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருஅவைக்கு எதிராக எழுந்த எதிர்ப்புக்களுக்குப் பணிந்து, தன் பொறுப்பைத் துறக்கவில்லை, மாறாக, இன்றையச் சூழலில், திருஅவையை வழிநடத்த, சக்தி மிக்க ஒருவர் தேவை என்பதை உணர்ந்ததாலேயே தன் பொறுப்பைத் துறக்க முடிவுசெய்தார் என்று, பேராயர் Gänswein அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.