2017-04-14 10:43:00

பலியானோ சிறையில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


ஏப்.,14,2017. ஏப்ரல் 13, புனித வியாழன் மாலை, பலியானோ சிறையில், ஆண்டவரின் இரவுணவு திருப்பலியை நிறைவேற்றியத் திருத்தந்தை, அங்கு வழங்கிய மறையுரை:

அன்பு சகோதர, சகோதரிகளே, 'தாம் இவ்வுலகத்தைவிட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது' என்பதையும், தான் காட்டிக்கொடுக்கப்படப் போகிறோம் என்பதையும் உணர்ந்திருந்த இயேசு, தன் சீடர்களுடன் இரவுணவை அருந்தினார். தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த இயேசு, இறுதி வரையும் அன்பு செலுத்தினார். இறைவன் நம்மீது கொண்டிருக்கும் அன்பும், இறுதிவரை உள்ள அன்பு.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களின் காலடிகளைக் கழுவுதல், அக்காலத்தின் பழக்கமாக இருந்தது. இதனை, வீட்டிலிருந்த அடிமைகள் செய்தனர். இயேசு, சீடர்களின் தலைவராக இருந்தாலும், தன்னையே ஓர் அடிமையாக்கி, சீடர்களின் காலடிகளைக் கழுவினார். பேதுரு அவரைத் தடுத்தபோதும், பணிபுரியவே தான் இவ்வுலகிற்கு வந்தேன் என்பதை, இயேசு அவருக்கு நினைவுறுத்தினார்.

இன்று நான் இங்கு வந்தபோது, ஒரு சிலர் என்னைப்பார்த்து, "இதுதான் திருத்தந்தை; இவர்தான் திருஅவையின் தலைவர்" என்று சொன்னார்கள். ஆனால், நான் சொல்கிறேன், இயேசுதான் திருஅவையின் தலைவர். இதை, நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. இதுதான் முழு உண்மை.

அன்று இயேசு செய்ததைப்போலவே, இன்று, இத்திருவழிபாட்டில், நானும் உங்கள் காலடிகளைக் கழுவுகிறேன். நீங்கள் ஒருவர் மற்றவரது காலடிகளைக் கழுவுங்கள் என்று நான் சொன்னால், அது உங்களுக்கு வேடிக்கையாகத் தெரியும். ஆனால், அடுத்தவருக்கு நீங்களும் ஏதாவது ஒருவகையில் உதவி செய்யவேண்டும் என்பதே என் விருப்பம். இது, அடுத்தவர் காலடிகளைக் கழுவுவதற்கு இணையாகும்.

தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டியில் சீடர்கள் ஈடுபட்டிருந்தபோது, இயேசு அவர்களிடம், 'உங்களில் பெரியவர், மிகச் சிறியவராக, பணியாளராக இருக்கவேண்டும்' என்று கூறினார். தான் சொன்னதுபோலவே, இறைமகன் இயேசு, நம்மிடையே, மிகச் சிறியவராக, பணியாளராக வாழ்ந்தார்.

சீடர்களின் காலடிகளைக் கழுவியபின், இயேசு, அவர்களுக்கு அப்பத்தையும், இரசத்தையும், தன் உடலாக, இரத்தமாக வழங்கினார். இவ்வகையில், இறைவனின் அன்பு நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.