2017-04-13 14:58:00

புனித வியாழன் புனித எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலி


ஏப்.13,2017. ஏப்ரல் 13, இப்புனித வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியாக, “நாம் நம் வழக்கமான பாதைகளை உடைத்துச் செல்வது நமக்கு நல்லது, ஏனென்றால், மிகுந்த கனிவும், தம்மையே வழங்குவதில் கொடை வள்ளலுமான இறைவனின் இதயத்திற்கு இது ஏற்புடையது” என வெளியிட்டுள்ளார். மேலும், இந்நாள் காலையில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களுடன், புனித எண்ணெய் மந்திரிக்கும் திருப்பலியை நிறைவேற்றினார். மூன்று பெரிய அழகான ஜாடிகளில் வைக்கப்பட்டு மந்திரிக்கப்பட்ட இந்தப் புனித எண்ணெய், நறுமணம் கலந்த ஒலிவ எண்ணெய்யாகும். இது, அருளடையாங்களின்போது பயன்படுத்தப்படுகின்றது. இத்திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “நற்செய்தியின் மகிழ்வு” பற்றி மறையுரையாற்றினார். “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் என்ற, இத்திருப்பலியின் லூக்கா நற்செய்திப் பகுதியைக் குறிப்பிட்டு, நற்செய்தி, அருள்பொழிவிலிருந்து பிறக்கின்றது என்று மறையுரையைத் தொடர்ந்து ஆற்றினார்.

நற்செய்தியின் மகிழ்வு என்பது, சிறப்பு மகிழ்வுகளாகும். மகிழ்வுகள் என பன்மையில் கூறும்போது, இவை பலவகையாக உள்ளன. ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும், தூய ஆவியார் எவ்வாறு இம்மகிழ்வை வழங்குகிறார் என்பதைப் பொருத்து இவை உள்ளன. இந்த மகிழ்வுகள் புதிய திராட்சைதோற்பைகளில் ஊற்றப்படவேண்டியுள்ளன. நற்செய்தி, எப்பொழுதும் புதுமை குன்றாத, புளிப்பாக மாறாத, ஆனால், அபரிவிதமாக ஊற்றிக்கொண்டே இருக்கின்ற இந்தப் திராட்சைதோற்பைகளின் மூன்று உருவக அடையாளங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நற்செய்தியின் முதல் அடையாளம், கானா திருமண விருந்தில் இருந்த கல் தண்ணீர் தொட்டிகள், இரண்டாவது அடையாளம், சமாரியப் பெண் நண்பகலில் தனது தலையில் சுமந்து சென்ற மர அகப்பையுடன் இருந்த குடம், மூன்றாவது அடையாளம், நம் ஆண்டவரின் குத்தி ஊடுருவப்பட்ட ஆழம்காண இயலாத இதயப் பாத்திரம். கானா திருமண விருந்தின் தண்ணீர்த் தொட்டிகள், ஒருவகையில், நிறைவான பாத்திரமாகும். இது, நம் அன்னை மரியாவாகும். இவ்வன்னையின் முழுநிறைவான வாழ்வு, நாம் அச்சத்திலிருந்து விடுபட்டு மகிழ்வோடு பிறருக்குப் பணியாற்ற உதவுகிறது. இரண்டாவது அடையாளமான சமாரியப் பெண்ணின் தண்ணீர் குடம், முக்கியமான சூழல்கள் பற்றிப் பேசுகின்றது. உயிருள்ள தண்ணீராகிய நம் ஆண்டவர், தமது தாகத்தைத் தணிப்பதற்குத் தண்ணீர் மொள்ளுவதற்கு அவரிடம் பொருள்கள் இல்லை. எனவே சமாரியப் பெண் அதற்கு உதவுகிறார். ஆண்டவர், சமாரியப் பெண்ணின் ஆன்மா என்ற அந்தப் பாத்திரத்தை, இரக்கத்துடன் அசைத்ததன் வழியாக, அந்த நகர மக்கள் அனைவர் மீதும் தூய ஆவியார் பொழியப்பட்டார். மேலும், நம் ஆண்டவர் மற்றொரு புதிய பாத்திரத்தை அல்லது திராட்சைத் தோற்பையை, புனித அன்னை தெரேசாவாக அளித்திருக்கிறார். அன்னை தெரேசா, தனது புன்சிரிப்பு, ஏழைகளின் காயங்களைத் தொட்டது ஆகியவற்றின் வழியாக, எல்லாருக்கும் நற்செய்தியைக் கொணர்ந்தார். நற்செய்தியின் மூன்றாவது அடையாளமாக அமைந்திருக்கின்ற நம் ஆண்டவரின் குத்தி ஊடுருவப்பட்ட ஆழம் காண இயலாத இதயப் பாத்திரத்தின் வழியாக, மரியாதை, மதிப்பு, தாழ்மை, தாழ்மையான பாதை ஆகியவற்றின் வழியில் மட்டுமே, ஏழைகளுக்கு மகிழ்வோடு நற்செய்தி அறிவிக்கும் முடியும் என்பதைக் கற்றுக்கொள்கிறோம். அன்பு அருள்பணியாளர்களே, இந்த மூன்று திராட்சைத்தோற்பைகளை நாம் தியானித்து, அவற்றிலிருந்து நாம் பருகும்வேளை, அன்னை மரியாவிடம் சுடர்விட்ட அந்த நிறைவை, நற்செய்தி, நம்மில்  கண்டடைவதாக. இவ்வாறு இப்புனித வியாழன் எண்ணெய் மந்திரிக்கும் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குருத்துவம் என்ற அருளடையாளத்தை இயேசு ஏற்படுத்தியதை இப்புனித வியாழனன்று நினைவுகூர்கிறோம். எனவே, திருஅவையின் அனைத்து அருள்பணியாளர்களுக்காக சிறப்பாகச் செபிப்போம். கடினமான சூழல்களில் பல அருள்பணியாளர்கள் நற்செய்தி அறிவித்து வருகின்றனர்.

நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்றார் இயேசு. இயேசுவின் இப்புதிய கட்டளையை எவ்வாறு நாம் வாழ்வாக்கி வருகிறோம் எனச் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.