2017-04-12 15:37:00

பாத்திமா நூற்றாண்டு விழா - வத்திக்கான் சிறப்புத் தபால் தலை


ஏப்.,12,2017. 1917ம் ஆண்டு, பாத்திமா நகரில் அன்னை மரியா காட்சியளித்த புதுமை நிகழ்வின் முதல் நூற்றாண்டு கொண்டாட்டங்கள், மே மாதம் 13ம் தேதி சிறப்பைக்கப்படுவதையொட்டி, மே மாதம் 4ம் தேதி, வத்திக்கான் நாடு, ஒரு சிறப்பு தபால் தலையை வெளியிடவுள்ளது.

1917ம் ஆண்டு, மே மாதம் முதல், அக்டோபர் மாதம் முடிய பாத்திமா நகரில் அன்னை மரியா, ஆடு மேய்க்கும் சிறார் மூவருக்குத் தோன்றிய காட்சியை வெளிப்படுத்தும் வகையில், இந்தத் தபால் தலையை Stefano Morri என்பவர் வடிவமைத்துள்ளார்.

மேலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஏப்ரல் 16ம் தேதி, தன் 90வது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, அவரது நினைவாக, மற்றொரு தபால் தலை, மே 4ம் தேதி வெளியிடப்படுகிறது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் முதல் நாளன்று, புனித பேதுரு பசிலிக்காவில் திறக்கப்பட்ட புனிதக் கதவருகே, முன்னாள் திருத்தந்தையும், தற்போதையத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஒருவரையொருவர் அணைத்தபடி நிற்கும் காட்சியை, Daniela Longo என்ற ஓவியர், இந்தத் தபால் உரையில் வடிவமைத்துள்ளார்.

புனிதர்கள் பேதுரு, மற்றும் பவுல் இருவரும் உரோம் நகரில் கி.பி. 67ம் ஆண்டு மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர் என்ற மரபையொட்டி, இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 1950ம் ஆண்டு நிறைவின் நினைவாக, இவ்விரு புனிதர்களின் உருவங்கள் பதிக்கப்பட்ட இரு தபால் தலைகள், மே மாதம் 4ம் தேதி வெளியாகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.