2017-04-08 15:46:00

“கிரக்கோவிலிருந்து பானமாவுக்கு” பன்னாட்டு மாநாடு


ஏப்.08,2017. “அழகு, உலகை மீட்கும்” என்பது, வாய்ப்பாடு போன்று சொல்லப்பட்டு வந்தாலும், இது உண்மையிலேயே மிகத் தெளிவான பொருளைக் கொண்டிருக்கின்றது என, திருப்பீடம் நடத்தும் ஒரு பன்னாட்டு மாநாட்டில் கூறப்பட்டது.

"கிரக்கோவிலிருந்து பானமாவுக்கு – இளையோரோடு நடைபயிலும் ஆயர்கள் மாமன்றம்" என்ற தலைப்பில் உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒத்துழைப்போடு, திருப்பீட பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு அவை, உரோம் நகரில் நடத்தும் பன்னாட்டு மாநாட்டில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய இயேசு சபை அருள்பணி Jean-Paul Hernandez அவர்கள், இவ்வாறு கூறினார்.

இம்மாநாட்டில், கலந்துகொள்ளும் பானமா நாட்டு இளைஞர் Angel Moses Poveda அவர்கள், இஞ்ஞாயிறன்று திருத்தந்தையிடமிருந்து, உலக இளையோர் நாள் சிலுவையைப் பெறுவதற்கு தன்னையே தயாரித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், இதில் கலந்துகொள்ளும் மற்றுமோர் பானமா இளைஞர் Yatsury Sàez அவர்கள், பானமாவில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம், மற்ற நாடுகளில் நடந்ததைவிட வித்தியாசமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

2019ம் ஆண்டு சனவரி 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை, 34வது உலக கத்தோலிக்க இளையோர் தினம் பானமாவில் கொண்டாடப்படவிருக்கின்றது. மத்திய அமெரிக்க வரலாற்றில், அப்பகுதியில் இத்தினம் இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும்.   

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், உலக கத்தோலிக்க இளையோர் தினத்தை ஏற்படுத்தினார். அதற்குரிய சிலுவை, கடந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் உலகின் பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

"கிரக்கோவிலிருந்து பானமாவுக்கு – இளையோரோடு நடைபயிலும் ஆயர்கள் மாமன்றம்" என்ற தலைப்பில் நிகழும் இந்த பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொள்ள, 104 நாடுகளிலிருந்தும், 44 இயக்கங்களிலிருந்தும் ஏறத்தாழ 300 இளையோர் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். ஏப்ரல் 5, இப்புதனன்று தொடங்கிய இம்மாநாடு, ஏப்ரல் 9, இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.