2017-04-08 14:59:00

தவக்காலச் சிந்தனை: புனிதவாரத்தின் பாடங்கள்


குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா வரை உள்ள இந்த எழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரம் என்றழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில், இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்கவேண்டும்? இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்கள் இவை என்பதாலும், நம் மீட்பு வரலாற்றின் உச்சகட்ட நிகழ்வுகள், இந்த வாரத்தில் நிகழ்ந்ததாலும், இதை, புனிதவாரம் என்றழைக்கிறோம்.

அந்த இறுதி நாள்கள் நடந்தவற்றில், புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே! இயேசுவின் நண்பர்களில் ஒருவர் காட்டிக்கொடுத்தார். மற்றொருவர் மறுதலித்தார். ஏனைய நண்பர்கள், ஒளிந்துகொண்டனர். மனசாட்சி விலைபோனதால், பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர், என்று தெரிந்தும், தவறாக, தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் தொங்கவிட்டனர்.

நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறோர் இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. ஆம், வேறோர் இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகையத் துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி, வித்தியாசமான ஓர் இலக்கணத்தை, இயேசு, அந்தச் சிலுவையில் சொன்னார். வெளிப்படையாகத் தெரியாத இந்தப் புனிதத்தை, நாம், தேடிக் கண்டுபிடிக்கவே, புனிதவாரம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. புனிதவாரம் முழுவதும், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய, கற்றுக்கொள்ளவேண்டிய, வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம், கல்வாரிக்கு!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.