2017-04-08 16:05:00

சிரியா கிறிஸ்தவத் தலைவர்கள் அமெரிக்க தாக்குதலுக்கு கண்டனம்


ஏப்.08,2017. ஏப்ரல் 4, கடந்த செவ்வாயன்று சிரியாவில் வேதியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன், அமெரிக்க ஐக்கிய நாடு, சிரியாவுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதலை நடத்துவதற்குத் தீர்மானித்திருப்பது குறித்து கடுமையாயச் சாடியுள்ளனர், சிரியாவின் இரு முக்கிய கத்தோலிக்கத் தலைவர்கள்.

சிரியா அதிபர் பாஷர் அல் ஆசாத் அவர்கள், அப்பாவி குடிமக்கள்மீது வேதிய ஆயுதத் தாக்குதல் நடத்தி, ஆதரவற்ற மக்களை அழித்துள்ளார் என்றும், கடவுளின் எந்தக் குழந்தையும் இத்தகைய கொடூரத்தால் ஒருபோதும் துன்புறக் கூடாது என்றும் சொல்லி, சிரியா விமானத் தளத்திற்கு எதிராக தாக்குதலை நடத்த உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப்.

இத்தாக்குதல், பகைமையின் ஆரம்பம் என்று குறை கூறியுள்ள, சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை Ignace Joseph Younan அவர்கள், ஐ.நா. நிறுவனம் தீர விசாரிக்கும் வரை, அமெரிக்க ஐக்கிய நாடு காத்திருக்க விரும்பாதது வெட்கத்துக்குரியது என்று, CNS செய்தியிடம் கூறியுள்ளார்.  

அமெரிக்க ஐக்கிய நாடு, இம்மாதத் தொடக்கத்தில், 59 ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.