2017-04-08 15:28:00

இளையோரே, இயேசுவுக்கு, ஆம் எனச் சொல்ல அஞ்ச வேண்டாம்


ஏப்.08,2017. “அன்பு இளையோர் நண்பர்களே, இயேசுவுக்கு, உங்கள் முழு இதயத்தோடு, ஆம் எனச் சொல்லவும், அவரின் அழைப்புக்கு தாராளமனத்துடன் பதில் கூறவும், அவரைப் பின்பற்றவும் அஞ்ச வேண்டாம்!” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில், இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டன.

மேலும், 32வது உலக கத்தோலிக்க இளையோர் நாளான இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், ஆண்டவருடைய திருப்பாடுகளின் திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குருத்து ஞாயிறாகிய இந்நாளில், ஒலிவக் கிளைகளையும், குருத்தோலைகளையும் ஆசீர்வதித்து, கர்தினால்கள், ஆயர்கள், துறவியர், மற்றும், பொதுநிலையினருடன் குருத்தோலை பவனியில் சென்று, திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பானமாவிலிருந்து 200 இளையோர் பிரதிநிதிகளும், ஏனைய மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும், மெக்சிகோவின் இளையோர் பிரதிநிதிகளும் இத்திருப்பலியில் கலந்துகொள்வார்கள். மேலும், இத்திருப்பலியில், உலக இளையோர் நாள் சிலுவை மற்றும், உரோம் மக்களுக்கு நலமளித்த Salus Populi Romani அன்னை மரியா படத்தை, போலந்து இளையோரிடமிருந்து, பானமா இளையோர் பெற்றுக்கொள்வார்கள். 2019ம் ஆண்டில் 34வது உலக கத்தோலிக்க இளையோர் நாள், பானமாவில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இஞ்ஞாயிறன்று தொடங்கும் புனித வாரத்தில், ஏறக்குறைய பத்து இலட்சம் திருப்பயணிகள் உரோம் நகருக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.