2017-04-07 15:16:00

ஈராக்கின் நினிவே சமவெளியில் 140 கி.மீ. அமைதிப்பயணம்


ஏப்.,07,2017. அமைதியை வெல்வதற்கும், அனைத்து வன்முறைகளையும் களைவதற்கும், ஈராக் நாட்டின் நினிவே சமவெளிப்பகுதியில் 140 கி.மீ. தூரத்திற்கு, ஓர் அமைதிப்பயணம், புனித வாரத்தில் மேற்கொள்ளப்படும் என்று, பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

எர்பில் நகரின் அங்காவா எனுமிடத்திலிருந்து துவங்கும் இந்தப் பயணம், 2014ம் ஆண்டு, இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பினரால் கைப்பற்றப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டுள்ள கரக்கோஷ் (Qaraqosh) என்ற நகரில் முடிவடையும்.

எர்பில் நகரில் நடைபெறும் குருத்தோலை ஞாயிறு திருப்பலிக்குப் பின் துவங்கும் இந்தப் பயணத்தை, கல்தேய வழிபாட்டு முறையைப் பின்பற்றுவோர் ஏற்பாடு செய்துள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்றியதால், நினிவே சமவெளியில் கிறிஸ்தவர்கள் வெளியேறிச் சென்ற பல நகரங்கள் வழியே இந்தப் பயணம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நினிவே சமவெளிப் பகுதியில், பழிக்குப் பழி என்ற உணர்வைக் களைந்து, சமாதானத்தை வளர்ப்பதற்கு, புனித வாரத்தில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது என்று, இப்பயணத்தின் ஏற்பாடுகளை செய்யும் குழுவினர் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.