2017-04-06 17:00:00

நவம்பர் 6 முதல், 10 முடிய பிலிப்பின்ஸ் இளையோரின் மாநாடு


ஏப்.,06,2017. இளமை எவ்வளவு அழகானது என்று இவ்வுலகிற்கும், திருஅவைக்கும் சொல்வதற்கு பிலிப்பின்ஸ் நாட்டில் நடைபெறும் இளையோரின் மாநாடு உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாக பிலிப்பின்ஸ் பேராயர் ஒருவர் கூறினார்.

2017ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி முதல், 10ம் தேதி முடிய, பிலிப்பின்ஸ் நாட்டின் மிந்தனாவோ தீவில், Zamboanga del Sur என்ற நகரில் நடைபெறவிருக்கும் இளையோர் மாநாட்டைக் குறித்து, பீதேஸ் செய்திக்கு அனுப்பிய ஒரு செய்தியில், Zamboanga பேராயர், Romolo De La Cruz அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்வாண்டு ஏப்ரல் 9ம் தேதி குருத்தோலை ஞாயிறன்று உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் சிறப்பிக்கப்படும் 32வது உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னை மரியாவின் புகழுரை வார்த்தைகளான "வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்" (லூக்கா 1:49) என்பவை, இந்த இளையோர் மாநாட்டின் மையப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Zamboanga பகுதியில் இஸ்லாமியர் பெரும்பான்மையினராக வாழ்வதால், இந்த இளையோர் மாநாட்டில் கிறிஸ்தவ இஸ்லாமிய ஒற்றுமை குறித்தும், பல்சமய உரையாடல் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்படும் என்று இளையோர் நாள் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் குழுவினர் கூறியுள்ளனர்.

2006ம் ஆண்டு, மிந்தனாவோ தீவின் Davao நகரில் நடைபெற்ற இளையோர் மாநாட்டிற்குப் பின், அத்தீவில் மீண்டும் ஒருமுறை இளையோர் மாநாடு நிகழ்கிறது என்று பீதேஸ் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.